60 தமிழ் இலக்கிய பெயர்களை 40 நொடிகளில் கூறி அசத்தும் தஞ்சை மாணவி

60 தமிழ் இலக்கிய நூல்களின் பெயர்களை 40 நொடிகளில் சொல்லி தஞ்சையை சேர்ந்த மாணவி சாதனை படைத்துள்ளார்.

Update: 2022-06-01 20:10 GMT

தஞ்சாவூர்

இந்த காலத்தில் குழந்தைகள் மிகவும் புத்தி கூர்மையுடன் திகழ்வதுடன் சிறிய வயதிலேயே பல சாதனைகளை படைத்து நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றனர். ஆங்கில மோகம் கொண்ட இன்றைய காலக்கட்டத்தில் தமிழின் சிறப்புகளை அறிந்து கொள்வதில் சிறுவயதிலேயே பலர் ஆர்வம் கொண்டுள்ளனர்.

தொன்மையான தமிழ் இலக்கிய நூல்கள் என்று சொன்னாலே அகநானூறு, புறநானூறு, சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, மணிமேகலை, குண்டலகேசி என ஒரு சில பெயர்களை தான் நம்மால் நினைவில் வைத்து பட்டியலிட முடியும்.

சாதனை புத்தகத்தில் இடம்

இதற்கு மேல் உள்ள ஏராளமான தமிழ் இலக்கிய நூல்களின் பெயர்களை நினைவில் வைத்துக்கொள்வதும். உச்சரிப்பதும் பெரியவர்களுக்கே மிகவும் சவாலானது.ஆனால் தஞ்சையை சேர்ந்த, 4-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி இனியா, 60 தமிழ் இலக்கிய நூல்களின் பெயர்களை 40 நொடிகளில் சொல்லி கலாம் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.

கவர்னர்-அமைச்சர்கள் பாராட்டு

பழங்கால தமிழ் இலக்கிய நூல்கள் இத்தனை உள்ளதா? என நாம் ஆச்சரியப்படும் அளவுக்கு கிடு, கிடுவென பட்டியலிட்டு அழகாக உச்சரித்து அசத்துகிறார். இத்தனைக்கும் அந்த சிறுமி ஆங்கில வழியில் படிக்கும் மாணவி என்பது தான் ஆச்சர்யம். மாணவி இனியாவின் இந்த சாதனை வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த சிறுமியின் சாதனைக்கு தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உள்ளிட்ட பலர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

தாய் நெகிழ்ச்சி

தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள எல்.ஐ.சி காலனி ஜே.ஜே நகரில் வசிக்கும் ரேவதி-ராமகிருஷ்ணன் தம்பதியின் 9 வயது மகளான இனியா, தஞ்யைில் உள்ள ஒரு தனியர் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். இனியாவின் இந்த சாதனை குறித்து தாய் ரேவதி கூறும்போது, இனியா 2 வயது குழந்தையாக இருக்கும்போதே ஜனாதிபதி, கவர்னர், பிரதமர், முதல்-அமைச்சர் பெயர்களை கூறுவாள்.

ஆனால் தமிழ் சரியாக வராது. இருப்பினும் தமிழ் மீது ஆர்வம் அதிகமாக இருந்தது. இதனால் தமிழில் இனியாவை சாதிக்க வைக்க வேண்டும் என்பது எனது ஆசையாக இருந்தது. இது சாத்தியமான்னு ஆரம்பத்துல எனக்கு தயக்கமாக இருந்தது. ஆனாலும் நம்பிக்கையோடு, 60 தமிழ் இலக்கிய நூல்களின் பெயர்களை ரொம்ப குறுகிய நேரத்துக்குள்ள சொல்ல வைக்கணும்னு முடிவெடுத்தேன்.

இனியா, 7 நாளிலேயே தயாராகி விட்டாள். இனியா, தமிழ் இலக்கிய நூல்களை சரியாக சொன்னதை வீடியோவில் பதிவு செய்து சென்னையில் உள்ள கலாம் வேர்ல்டு ரெக்கார்டு அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தோம். அவர்கள் பார்த்து தனித்துவமான தமிழில் சொல்லியதால் தேர்வு செய்து அதற்கான சான்றிதழ் மற்றும் பதக்கத்தை இனியாவுக்கு வழங்கினர். இது மகிழ்ச்சியாக இருக்கிறது. அடுத்து வேறொரு துறையில் உலக சாதனை படைக்க வைக்க முயற்சி மேற்கொள்வோம் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.




Tags:    

மேலும் செய்திகள்