அனைத்து தரப்பினரிடமும் சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

Update: 2023-02-06 19:30 GMT

அனைத்து தரப்பினரிடமும் சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று சேலத்தில் நடந்த விழிப்புணர்வு கூட்டத்தில் அலுவலர்களுக்கு, கலெக்டர் கார்மேகம் அறிவுறுத்தி உள்ளார்.

விழிப்புணர்வு கூட்டம்

சிறுதானிய மகத்துவம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஐக்கிய நாடுகள் சபையில் இந்த ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் சிறுதானியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு அனைத்து துறை தலைமை அலுவலர்களைக் கொண்டு சிறுதானியத்தின் மகத்துவம் குறித்து இந்த கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது. மேலும் கிராமங்கள் உள்பட மாவட்டம் முழுவதும் சிறுதானியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வரப்படுகிறது.

தமிழகத்தில் சிறுதானியங்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படும் சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி உள்ளடங்கிய 10 மாவட்டங்கள் வடக்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. அதேபோன்று விருதுநகர், தூத்துக்குடி உள்ளடக்கிய 12 மாவட்டங்கள் தெற்கு மண்டலமாகவும் பிரிக்கப்பட்டு உள்ளன.

சிறுதானிய பயிர்

சர்வதேச சிறுதானிய பயிராக கேழ்வரகு தேர்வு செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் சோளம், கம்பு, ராகி, மக்காச்சோளம், சாமை, தினை, வரகு, பனிவரகு மற்றும் குதிரைவாலி ஆகிய சிறுதானிய பயிர்கள் ஆண்டுக்கு சராசரியாக ஒரு லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வை விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களிடமும் ஏற்படுத்தும் வகையில் அதிகாரிகள் பணியாற்றிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் கூடுதல் கலெக்டர் பாலச்சந்தர், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் மணி, வேளாண்மைத்துறை இணை இயக்குனர் சிங்காரம், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் தமிழ்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்