விழுப்புரத்தில் விழிப்புணர்வு பேரணி
தேசிய சட்ட தினத்தையொட்டி விழுப்புரத்தில் விழிப்புணர்வு பேரணி
விழுப்புரம்
இந்திய அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்ட தினமான நவம்பர் 26-ந் தேதி அரசியலமைப்பு தினம் அல்லது தேசிய சட்ட தினமாக கொண்டாடப்படுகிறது. அரசியலமைப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்நாளை ஆண்டுதோறும் சட்டதினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று காலை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணிக்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பூர்ணிமா தலைமை தாங்கி, கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார்.
இப்பேரணியில் மாணவர்கள், சட்ட தினம் குறித்த விளம்பர பதாகைகளை கையில் ஏந்தியவாறு சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இப்பேரணியானது நீதிமன்ற வளாகத்திலிருந்து புறப்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் வரை சென்று மீண்டும் நீதிமன்ற வளாகத்தில் நிறைவடைந்தது. இதில் நீதிபதிகள், வக்கீல்கள், தேசியப்படை மாணவர்கள், மாணவர் மன்றத்தை சேர்ந்தவர்கள், நீதிமன்ற ஊழியர்கள் கலந்துகொண்டனர்.