தூய்மையான நகரங்களுக்கான விழிப்புணர்வு பேரணி
குற்றாலத்தில் தூய்மையான நகரங்களுக்கான விழிப்புணர்வு பேரணி நடந்தது.
குற்றாலம், மேலகரம், இலஞ்சி ஆகிய பேரூராட்சிகள் இணைந்து தூய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்கத்தின் விழிப்புணர்வு பேரணியினை நேற்று குற்றாலத்தில் நடத்தியது. இந்த பேரணியை அண்ணா சிலை அருகில் இருந்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட கலெக்டர் துரை. ரவிச்சந்திரன், நெல்லை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கண்ணன், தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் சிவபத்மநாதன், ராஜா எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாக அதிகாரிகள் சுஷ்மா (குற்றாலம்), பரமசிவன் (மேலகரம்), அரசப்பன் (இலஞ்சி), குற்றாலம் சுகாதார அலுவலர் ராஜகணபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து நெகிழி பயன்பாட்டை தவிர்த்திடவும், மஞ்சள்பை பயன்படுத்திடவும் விழிப்புணர்வு வாசகம் அடங்கிய பதாகைகளை ஏந்தி குற்றாலம் அண்ணாசிலை முதல் பராசக்தி மகளிர் கல்லூரி வரை இப்பேரணி நடைபெற்றது. பேரணியில் கல்லூரி மாணவிகள் மற்றும் மகளிர் சுய உதவி குழுவினர் கலந்து கொண்டனர்.
மேலும் குற்றாலம், மேலகரம், இலஞ்சி ஆகிய பேரூராட்சிகளில் தூய்மை பணிக்காக சிறப்பாக பணியாற்றிய சுகாதார அலுவலர், சுகாதார மேற்பார்வையாளர்கள், தூய்மைப்பணியாளர்கள் மற்றும் மக்கும், மக்காத கழிவுகளை முறையாக பிரித்து வழங்கிய வணிக கடைகாரர்களையும் பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது.