சாத்தூர்,
சாத்தூரில் புகையில்லா போகி பண்டிகை கொண்டாட வலியுறுத்தி சாத்தூர் நகராட்சி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை சாத்தூர் நகர் மன்ற தலைவர் குருசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் நகராட்சி ஆணையாளர் இளவரசன், நகர் மன்ற கவுன்சிலர்கள், நகராட்சி ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மாசுபாட்டை தடுக்கும் விதமாக நகராட்சி சார்பில் வருகிற 14-ந் தேதி வரை தினமும் வீடுகள் தோறும் சென்று பழைய பொருட்கள் சேகரிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் முன்வந்து தங்கள் வீடுகளில் பழைய பொருட்களை வழங்க வேண்டும் எனவும் பேரணியில் வலியுறுத்தப்பட்டது. அதேபோல காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை அண்ணா நகர், மேல காந்தி நகர், வெள்ளைக்கரை ரோடு, நந்தவனப்பட்டி தெற்கு தெரு, பெருமாள் கோவில் வடக்கு ரத வீதி என 5 இடங்களில் குப்பைகளை நாள் முழுவதும் வாங்குவதற்கு குழு அமைக்கப்பட்டு உள்ளது என நகராட்சி ஆணையர் கூறினர்.