தொழில் நிறுவனங்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

ராணிப்பேட்டையில் தொழில் நிறுவனங்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

Update: 2022-12-31 18:52 GMT


இந்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் கீழ் இயக்கும் சென்னை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் வளர்ச்சி அலுவலகம், தமிழக அரசின் தொழில் வணிகத்துறை, ராணிப்பேட்டை மாவட்ட தொழில் மையத்துடன் இணைந்து ராணிப்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் தொழில் நிறுவனங்களுக்கு பழுதில்லா உற்பத்தி, விளைவில்லா உற்பத்தி சான்றளிப்பு திட்டம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது.

தரமான பொருட்களை தயாரிப்பதற்கு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை ஊக்குவித்தல், பழுதில்லா உற்பத்தி செயல்முறைகளை ஏற்று, சுற்றுச்சூழலை பாதிக்காமல் உற்பத்தியை முன்னெடுத்தல் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சி அலுவலக இணை இயக்குனர் எஸ்.சுரேஷ் பாபுஜி மத்திய அரசு திட்டங்கள் குறித்து உரையாற்றினார். துணை இயக்குனர் செந்தில்குமார் சான்றிதழ் பெறுவது தொடர்பாக இணைய வழி பயிற்சி அளித்தார்.

மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ப.ஆனந்தன் மாவட்ட தொழில் மையத்தின் மூலம் செயல்படுத்தும் திட்டங்கள், மானியங்கள் குறித்தும், சிட்கோ கிளை மேலாளர் வெண்மணிசெல்வன் சிட்கோ திட்டங்கள் குறித்தும், மதிப்பீட்டாளர் கார்த்திகேயன் குறு, சிறு, நடுத்தர தொழில் திட்டம் மற்றும் சான்றிதழ் பெறுவதன் நன்மைகள் குறித்தும் பேசினர்.

நிகழ்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் இயங்கி வரும் தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்