பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலம்

பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

Update: 2023-02-21 18:44 GMT

ஆட்சி மொழி சட்ட வாரத்தை முன்னிட்டு பெரம்பலூரில் பள்ளி மாணவ-மாணவிகளின் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று காலை நடந்தது. பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்து புறப்பட்ட இந்த ஊர்வலத்தை கலெக்டர் கற்பகம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகள் அன்னை தமிழே ஆட்சிமொழி, தமிழில் பெயர்ப்பலகை அமையட்டும், தமிழ்நாட்டின் வீதியெல்லாம் தமிழ் தழைக்கட்டும், என்பதை வலியுறுத்தும் விதமாக விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியவாறும், துண்டு பிரசுரங்களை வணிக நிறுவனங்களுக்கும், பொதுமக்களுக்கும் வழங்கியவாறு சென்றனர்.

இந்த ஊர்வலம் பழைய பஸ் நிலையம், காமராஜர் வளைவு, சங்குபேட்டைக்கு சென்று, பின்னர் கடைவீதி வழியாக மீண்டும் அரசு பள்ளியில் வந்து முடிவடைந்தது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி, வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி, தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் சித்ரா, தமிழ் செம்மல் கவிஞர்கள், தமிழறிஞர்கள், தமிழ் இலக்கிய அமைப்பினர், தூய தமிழ் பற்றாளர்கள், பதியம் இலக்கிய சங்கத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆட்சி மொழி சட்ட வாரத்தை முன்னிட்டு அரசு பணியாளர்களுக்கு இன்று (புதன்கிழமை) கணினித்தமிழ் ஒழுங்குறி பயன்பாடு குறித்து பயிற்சி, நாளை (வியாழக்கிழமை) ஆட்சி மொழி மின்காட்சியுரை, நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) தமிழில் வரைவுகள், குறிப்புகள் எழுதுவதற்கான பயிற்சி ஆகியவை நடைபெறவுள்ளது. வருகிற 25-ந்தேதி வணிக நிறுவன அமைப்புகள், அதன் உரிமையாளர்களுடன் தமிழில் பெயர் பலகைகள் அமைத்தல் தொடர்பான கூட்டமும், 27-ந்தேதி ஆட்சி மொழி சட்டம் பற்றிய விழிப்புணர்வு பட்டிமன்றமும், 28-ந்தேதி பொதுமக்கள் ஆட்சி மொழி சட்டத்தை அறியும் வகையில் திட்ட விளக்க கூட்டமும் நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்