மாசு இல்லாத போகிப்பண்டிகை குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்

வேலூரில் மாசு இல்லாத போகிப்பண்டிகையை கொண்டாடுவது தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Update: 2023-01-11 16:04 GMT

மாசு இல்லாத போகிப்பண்டிகை

வேலூர் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம், வேலூர் மாநகராட்சி மற்றும் தேசிய பசுமை படையின் சார்பில் திடக்கழிவு மற்றும் போகிப்பண்டிகை நிகழ்வில் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பை தவிர்ப்பது தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் வேலூர் கோட்டை காந்திசிலை அருகே நேற்று நடந்தது. வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா, கமிஷனர் அசோக்குமார், மாசு கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கி விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், ''போகிப்பண்டிகை தினத்தன்று பயன்பாடற்ற பொருட்களை எரிப்பதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. எனவே பொதுமக்கள் பழைய மற்றும் தேவையற்ற பொருட்களை தீயிலிட்டு எரிக்காமல் தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். சுற்றுச்சூழல் மாசு இல்லாத போகிப்பண்டிகையை கொண்டாட வேண்டும். ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பொருட்களின் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக் கவர்களுக்கு பதிலாக மஞ்சப்பையை அனைவரும் பயன்படுத்த வேண்டும்'' என்றார்.

விழிப்புணர்வு ஊர்வலம்

ஊர்வலம் காந்திசிலை அருகே இருந்து புறப்பட்டு மக்கான் சிக்னல், அண்ணாசாலை வழியாக சென்று வேலூர் பழைய மாநகராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது. இதில், பள்ளி தேசிய பசுமை படை மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு மரம் வளர்ப்போம், மழை பெறுவோம். குப்பைகளை கண்ட இடங்களில் போடாதீர். புகையில்லா போகியை கொண்டாட பழைய மற்றும் உபயோகமற்ற பொருட்களை எரிக்காதீர் என்பது உள்பட பல்வேறு வாசகங்களை கையில் ஏந்தியபடி சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் இதுதொடர்பான துண்டுபிரசுரங்களையும் வழங்கினர்.

ஊர்வலத்தில், வேலூர் தாசில்தார் செந்தில், மாநகர்நல அலுவலர் கணேஷ், 2-வது மண்டலக்குழு தலைவர் நரேந்திரன், மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவிசெயற்பொறியாளர் தொல்காப்பியன், உதவிபொறியாளர் சுஷ்மிதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்