நகரின் தூய்மை குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம்

திருவண்ணாமலையில் நகரின் தூய்மை குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை நகரமன்ற தலைவர் நிர்மலாவேல்மாறன் பொதுமக்களுக்கு வழங்கினார்.

Update: 2023-06-04 12:46 GMT

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகரங்களையும் தூய்மை நகரங்களாக மாற்றும் நோக்கத்தில் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கத்தை கடந்த ஆண்டு ஜூன் மாதம் 3-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு குப்பைகளை தரம் பிரித்து கொடுப்பது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துதல், நீர்நிலைகள் மற்றும் மழைநீர் வடிகால்களை சுத்தம் செய்தல், நீர்நிலைகளின் கரைப்பகுதி மற்றும் பொது இடங்களில் மரம் நடுதல் உள்ளிட்ட 7 முக்கியமான செயல்பாடுகளை வடிவமைத்து சிறப்பு தூய்மைப் பணி மேற்கொள்ள வேண்டும் என முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி திருவண்ணாமலை நகராட்சியில் முதல்- அமைச்சரின் 7 இலக்குகளை நிறைவேற்றிடும் வகையில் நகரின் தூய்மை அவசியம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வீடு, வீடாக வழங்கும் பணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகரமன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

அப்போது நகராட்சி ஆணையாளர் தட்சிணாமூர்த்தி, தூய்மை அருணை ஒருங்கிணைப்பாளர் கார்த்திவேல்மாறன், நகராட்சி பொறியாளர் நீலேஸ்வர் உள்பட அலுவலர்கள் உடனிருந்தனர்.

தொடர்ந்து தாமரை நகர் உழவர் சந்தை அருகே உள்ள பூங்காவை மக்கள் பங்கேற்புடன் தூய்மை செய்தல், அய்யங்குளம் பகுதியில் குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், சோமவாரக்குளம் தூய்மை பணி, முத்து விநாயகர் கோவில் தெருவில் கட்டுமான மற்றும் இடிபாடு கழிவுகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகள் நகராட்சி சார்பில் நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்