போலி மது, கள்ளச்சாராய தீமைகள் குறித்து விழிப்புணர்வு
ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் போலி மது, கள்ளச்சாராய தீமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் போலி மதுபானங்கள் மற்றும் கள்ளச்சாராயத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு தலைவர் எஸ். சத்யா சதீஷ்குமார் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் முருகேசன் (வட்டார ஊராட்சி) முன்னிலை வகித்தார். மேலாளர் ராஜா வரவேற்றார்.
விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் எஸ். சத்யா சதீஷ்குமார் பேசும்போது மது அருந்துவதால் உடல் பாதிப்பு ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் உயிரிழப்பும் ஏற்படுகிறது. மது அருந்துவதால் உடலுக்கு தீங்கானது மட்டுமல்லாமல் குடும்பம் பாதிக்கப்படுகிறது.
குறிப்பாக போலியான மதுபானங்கள் மற்றும் கள்ளச்சாராயத்தினால் அதிகமானோர் உயிரிழந்து தங்களின் குடும்பத்தை பெரும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளனர். எனவே வருங்கால இளைஞர்கள் சமுதாயத்தை காக்கவும் மது அருந்தும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் தவறான இந்த பழக்கத்தை கைவிட வேண்டும்'' என்றார்.நிகழ்ச்சியில் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் எஸ்.கே.சதீஷ் குமார் உள்ளிட்ட ஒன்றிய கவுன்சிலர்கள் அரசு துறை அலுவலர்கள் உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.