போதைப்பொருள் தீமைகள் விழிப்புணர்வு
கெரடாமட்டத்தில் போதைப்பொருள் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கோத்தகிரி
கோடநாடு ஊராட்சிக்கு உட்பட்ட கெரடாமட்டம் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் சோலூர்மட்டம் போலீஸ் நிலையம் சார்பில், கெரடாமட்டம் பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள், பெண்களுக்கு போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. சப்-இன்ஸ்பெக்டர் வேலுசாமி பேசும்போது, போதைப்பொருட்களை பயன்படுத்துவதால் உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படுவதுடன், பொருளாதாரம் பாதிக்கப்படும். எனவே, குடும்பத்தில் பிரச்சினைகள் ஏற்படும். அதுமட்டுமின்றி போதைப்பொருட்களுக்கு அடிமை ஆகுபவர்கள் குற்றச் செயல்களில் அதிகம் ஈடுபட வாய்ப்பு உள்ளது. எனவே, போதைப்பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். போதைப்பொருள் இல்லாத சமுதாயத்தை உருவாக்க காவல்துறைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.