நிலை குழுக்கள் அமைப்பது குறித்து விழிப்புணர்வு கூட்டம்
நிலை குழுக்கள் அமைப்பது குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
பந்தலூர்
பந்தலூர் அருகே நெலாக்கோட்டை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி அளவிலான நிலை குழுக்கள் அமைப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசினார். அப்போது, ஊராட்சிகளின் மேம்பாடு மாவட்ட, மாநில, தேசிய வளர்ச்சியை உருவாக்கும். ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பள்ளிகள், சுகாதார நிலையங்கள் உள்ளிட்டவை கண்காணித்து சேவைகளை மேம்படுத்த முடியும். ஊராட்சி அனைத்து துறைகளும் இணைந்து செயலாற்ற வேண்டிய முக்கிய பங்கு உள்ளதால் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் அனைத்து திட்டங்களையும் அறிந்து கொண்டு செயல்படுத்த வேண்டும் என்று கூறினார்.
தொடர்ந்து ஒருங்கிணைப்பாளர் ரவீந்திரன் பேசுகையில், ஊராட்சியில் நியமன குழு, வளர்ச்சி குழு, வேளாண்மை மற்றும் நீர்பிரி முகடு குழு, பணிகள் குழு, கல்விக்குழு ஆகிய 5 விதமான குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். இதில் நியமன குழுவில் தலைவர் தவிர 2 ஊராட்சி உறுப்பினர்கள் இருக்க வேண்டும். இதர குழுக்களில் அரசு அலுவலர்கள் மற்றும் வெளி நபர்கள் 2 பேர் இருக்கலாம். இந்த குழுக்கள் முறையாக செயல்பட்டால் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படும் என்று பேசினார்.