மாணவர்கள் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்

திருப்பத்தூரில் மாணவர்கள் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் அமர்குஷ்வாஹா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Update: 2022-06-09 12:55 GMT

திருப்பத்தூர்

திருப்பத்தூரில் மாணவர்கள் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் அமர்குஷ்வாஹா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

விழிப்புணர்வு ஊர்வலம்

திருப்பத்தூர் மீனாட்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி கல்வித்துறை சார்பில் 2022-23-ம் கல்வி ஆண்டில் மாணவர்கள் சேர்க்கை குறித்த விழிப்புணா்வு ஊர்வலம் நடைபெற்றது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் தலைமை தாங்கினார். கலெக்டர் அமர்குஷ்வாஹா விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது கலெக்டர் அமர்குஷ்வாஹா பேசியதாவது:-

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் பள்ளிகளில் உள்ள சமையல் அறைகள் மற்றும் கழிவறைகளை சுத்தமாக வைத்திருக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வருகிற 13-ந்தேதிக்கு முன்னதாக பள்ளிகளில் உள்ள சமையல் அறைகள், வெள்ளை அடிக்காமல் நிலுவையில் உள்ள பட்டியல்களை சேகரித்து முதன்மை கல்வி அலுவலர் மூலம் தெரிவிக்க வேண்டும்.

மாணவர்களுக்கு நலத்திட்டங்கள்

கொரோனா காலத்தில் பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்ததால் நிறைய மாணவர்கள் பள்ளிக்கு வராமல் உள்ளனர். அவர்கள் மீது தனி கவனம் செலுத்தி பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் மூலம் விழிப்புணர்வு செய்து, 5 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள் பள்ளிக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும்.

பெற்றோர்களிடம் அரசின் மூலமாக பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்குவதை ஒலிபெருக்கி மூலமாக எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி மாணவர்களை பள்ளிக்கு வரவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஊர்வலம் பள்ளியில் தொடங்கி நகராட்சி அலுவலகம், கலெக்டர் அலுவலகம் மற்றும் முக்கிய வீதிகள் வழியாக சென்று பள்ளியில் முடிவடைந்தது. ஊர்வலத்தில் 200 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் சுதர்சனம், ஜெயவேல், உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்