பெண்களின் முன்னேற்றத்திற்கு சேவை புரிந்த சமூக சேவகர், தொண்டு நிறுவனத்திற்கு விருது - கலெக்டர் சாந்தி தகவல்
தர்மபுரி மாவட்டத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர், தொண்டு நிறுவனத்திற்கு விருது வழங்கப்படுகிறது என்று கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
விருது
பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள் சுதந்திர தினவிழாவின் போது தமிழ்நாடு முதல்-அமைச்சரால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி 2023-ம் ஆண்டில் சிறந்த சமூக சேவகருக்கு 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்று வழங்கப்பட உள்ளது. சிறந்த தொண்டு நிறுவனத்திற்கு ரூ.50 ஆயிரம் பரிசுடன் 10 கிராம் எடை கொண்ட தங்கப்பதக்கம் வழங்கப்பட உள்ளது.
இந்த விருதை பெற தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்ட 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் நடவடிக்கை போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் சமூக சேவகர் மற்றும் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இணையதளத்தில் பதிவேற்றம்
இந்த விருதுக்கு தகுதியான தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகி விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப விவரங்கள் அனைத்தையும் தமிழ்நாடு அரசின் (https://awards.tn.gov.in) விருதுகள் என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.