அவல்பூந்துறை ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கூடத்தில் எண்ணும் எழுத்தும் திட்ட செயல்பாடு குறித்து கலெக்டர் ஆய்வு

கலெக்டர் ஆய்வு

Update: 2022-12-14 20:27 GMT

அவல்பூந்துறையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் திட்டசெயல்பாடு குறித்து கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி ஆய்வு செய்தார்.

எண்ணும் எழுத்தும்

கொரோனா காலத்தில் சுமார் 2 ஆண்டுகள் வகுப்புகள் இயங்காத நிலையில், அடிப்படை எழுத்தறிவு இல்லாத மாணவ-மாணவிகளுக்காக தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்ட எண்ணும் எழுத்தும் திட்டம் ஈரோடு மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் 1,189 பள்ளிக்கூடங்களில் எண்ணும் எழுத்தும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதன் மூலம் 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்புவரை படிக்கும் 37 ஆயிரத்து 718 மாணவ-மாணவிகள் அடிப்படை எழுத்துக்கள், வார்த்தைகள் மற்றும் கணிதம் குறித்து சிறப்பாக படித்து வருகிறார்கள். மேலும் இந்த திட்டத்தின் மூலம் மாணவ-மாணவிகளுக்கு கணினியில் பயிலும் வாய்ப்புகளும் உருவாக்கப்பட்டு உள்ளன.

கலெக்டர் ஆய்வு

இந்த திட்டப்பணிகளை ஈரோடு மாவட்ட கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி முக்கியத்துவ திட்டமாக கண்காணித்து வருகிறார்.

அதன்படி மொடக்குறிச்சி ஒன்றிய பகுதியில் ஆய்வு மேற்கொண்ட அவர் அவல்பூந்துறையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு சென்றார். அங்கு எண்ணும் எழுத்தும் திட்டத்தில் படிக்கும் மாணவ-மாணவிகளை பார்வையிட்டார். மேலும், இந்த திட்டத்துக்காக தமிழக அரசு வழங்கி உள்ள கல்வி துணைக்கருவிகள் முறையாக பயன்படுத்தப்படுகிறதா என்றும் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகளிடம் கேட்டு அறிந்தார்.

பள்ளிக்கூடங்களுக்கு மாணவ-மாணவிகள் விடுமுறை இன்றி தொடர்ச்சியாக வருவதை ஆசிரியர்கள் கண்காணித்து பெற்றோருக்கு ஆலோசனைகள் வழங்க வேண்டும். பள்ளி வளாகத்தில் சிறிய அளவிலான காய்கறி தோட்டம் அமைக்க வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு ஆலோசனை அளித்தார். பள்ளிக்கூடத்தில் உள்ள சமையல் அறைக்கு சென்ற அவர், அங்கு மாணவ-மாணவிகளுக்காக சமைக்கப்பட்டு இருந்த உணவை சாப்பிட்டு ருசி பார்த்தார். இந்த நிகழ்வின்போது உள்ளாட்சித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்