பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்

பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டுமென கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் வளர்மதி வலியுறுத்தினார்.

Update: 2023-05-01 18:31 GMT

கிராமசபை கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த வாங்கூர் ஊராட்சிக்கு உட்பட்ட எடையந்தாங்கல் கிராமத்தில் தொழிலாளர் தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் அம்சவேணி பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றியக் குழு தலைவர் கலைக்குமார், ஒன்றியக் குழு உறுப்பினர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் கலெக்டர் வளர்மதி, சோளிங்கர் தொகுதி எம்.எல்.ஏ. ஏ.எம்.முனிரத்தினம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலெக்டர் வளர்மதி பேசியதாவது:-

பிளாஸ்டிக்

அனைவரும் குப்பைகளை தரம் பிரித்து தூய்மைபணியாளரிடம் வழங்க வேண்டும், பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும், உடல் ஆரோக்கியத்திற்கு நல்ல ஊட்டச்சத்து உணவு முறைகளை பின்பற்ற வேண்டும், மகசூல் அதிகரிக்க இயற்கை முறையில் தழைச்சத்து, மாட்டுச்சாணம் உரமிடுதல், சுழற்சி முறையில் பயிரிட வேண்டும்.

பெண்கள் படித்து பட்டம் பெற்று அரசு பணிகளுக்கு செல்ல பெற்றோர்கள் ஊக்கம் அளிக்க வேண்டும். பெண்கள் ஊட்டச்சத்து உணவுகள் எடுத்துக்கொள்வது அவசியம்.

இவ்வாறு கலெக்டர்பேசினார்.

கல்லூரிக்கு கட்டிடம்

கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் எடையந்தாங்கல் கிராமத்தில் உள்ள நான்கு தெருக்களும் ஒவ்வொரு ஊராட்சியில் உள்ளது. இதை வாங்கூர் ஊராட்சியில் சேர்க்க வேண்டும். நாராயணபுரம் கிராமத்திற்கு புதிய அங்கன்வாடி மையம் கட்டித்தர வேண்டும், வாங்கூரிலிருந்து கரடிகுப்பம் வரை உள்ள மண்சாலையை தார்சாலையாக மாற்ற வேண்டும், ஏரி நீர் வரத்து கால்வாய், ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர் செல்லும் கால்வாய் ஆக்ரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். சோளிங்கர் அரசுக்கல்லூரிக்கு கட்டிடம் கட்டித்தர வேண்டும் எனவும், கொடைக்கல் பகுதியில் அரசு நெல் கொள்முதல் நிலைய கட்டிடம் கட்ட வேண்டும் என ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ., கலெக்டரிடம் கோரிக்கை வைத்தார்.

தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய தூய்மைப்பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளருக்கு பட்டுப் புடவை வழங்கினார். நூற்றுக்கும் மேற்பட்ட மனுக்களை பெற்றார்.

இதில், தாசில்தார் ஆனந்தன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தனசேகரன், சித்ரா மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலகங்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் அம்சவேணி பெரியசாமி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்