பஸ்களை வேகமாக இயக்குவதை தவிர்க்க வேண்டும்

பஸ்களை வேகமாக இயக்குவதை தவிர்க்க வேண்டும் என தனியார் பஸ் டிரைவர்களுக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா வேண்டுகோள் விடுத்தார்

Update: 2023-06-24 18:45 GMT

நெல்லிக்குப்பம்

விழிப்புணர்வு கூட்டம்

கடலூர், பண்ருட்டி தாலுகா தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பாக சாலை பாதுகாப்பு, சாலை விதிகள், விபத்து தவிர்ப்பு ஆகிய விழிப்புணர்வு கூட்டம் கடலூரை அடுத்த வரக்கால்பட்டு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு கடலூர் மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க செயலாளர் தேசிங்கு ராஜன் தலைமை தாங்கினார். கடலூர், பண்ருட்டி தாலுகா தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க செயலாளர் டாக்டர் சதீஷ்குமார் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா பேசியதாவது:-

கடும் நடவடிக்கை

தனியார் பஸ் டிரைவர்கள் பஸ்களை வேகமாக ஓட்டுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். நேர கணக்கீடு பார்த்து வேகமாக பஸ்களை ஓட்டுவதால் தான் விபத்து ஏற்படுகிறது. இதை தவிர்த்து பஸ்களை இயக்க வேண்டும்.

தற்போது மேல்பட்டாம்பாக்கத்தில் நிகழ்ந்த விபத்தில் 6 பேர் பலியாகி 90-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் இறந்தவர்களின் குடும்பத்தினரை யார் காப்பாற்றுவார்கள், உயிர் போனால் யார் பொறுப்பேற்பது என சிந்தித்து டிரைவர்கள் பஸ்களை இயக்க வேண்டும். தடை செய்யப்பட்ட போதை பொருட்களை உட்கொண்டு வாகனங்களை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழிப்புணர்வு உறுதிமொழி

தொடா்ந்து கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு பேசுகையில், டிரைவர்கள் ஒவ்வொரு முறையும் பஸ்களை இயக்கும்போது தனது குடும்பத்தினர்கள் தனக்கு முன்னதாக அமர்ந்து உள்ளார்கள் என்பதை மனதில் வைத்துக்கொண்டு இயக்க வேண்டும். பயணிகளை பாதுகாப்பாக கொண்டு செல்ல வேண்டும் என்றார். பின்னர் அனைத்து பஸ் டிரைவர்களும், கண்டக்டர்களும் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து பஸ் உரிமையாளர்கள் பேசும்போது, கடலூர் நெல்லிக்குப்பம் சாலையில் தற்போது சாலையில் விபத்து ஏற்படாமல் இருக்க வேகத்தடை மற்றும் அதன் அருகில் இரும்பு தடுப்பும் உள்ளதால்வாகனங்களை இயக்குவதற்கு சிரமமாக உள்ளது. ஆகையால் அதிகாரிகள் விடுத்துள்ள அறிவுறுத்தலின் பேரில் வாகனங்களை இயக்குவோம் என தெரிவித்தனர்.

பின்னர் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களுக்கு பல்வேறு சாலை விதிகள் மற்றும் விபத்து தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உதயகுமார், கவிதா, சீனிவாசன், கண்ணன், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அமர்நாத், பரமசிவம், பத்மநாபன் மற்றும் தனியார் பஸ் உரிமையாளர்கள், டிரைவர்கள், கண்டக்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்