பனை, ஆல மரங்களை வெட்டுவதை தவிர்க்க வேண்டும்-கலெக்டர்

பனை, ஆலமரங்களை வெட்டுவதை தவிர்க்க வேண்டும் என பசுமை குழு கூட்டத்தில் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கேட்டுக்கொண்டார்..

Update: 2023-09-28 11:26 GMT

பனை, ஆலமரங்களை வெட்டுவதை தவிர்க்க வேண்டும் எனவும் வேலூர் மாவட்டத்தில் 18 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் பசுமை குழு கூட்டத்தில் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

பசுமைக்குழு கூட்டம்

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பசுமைக் குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, மாவட்ட வன அலுவலர் கலாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் வேலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட உள்ள திட்டப் பணிகள் காரணமாக அகற்றப்பட வேண்டிய மரங்கள் குறித்த விவரம் பசுமை குழு ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

இதையடுத்து கலெக்டர் குமாரவேல்பாண்டியன் பேசியதாவது:-

பனைமரம் மற்றும் ஆலமரம் போன்ற பல வருடங்களுக்கு பயன் தரக்கூடிய மரவகைகளை அகற்றுவதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் விதிமுறைகளின்படி ஒரு மரத்தை அகற்றினால் அதற்கு ஈடாக 10 மரங்கள் நடவு செய்ய வேண்டும் என்கின்ற நிலையை பின்பற்றும் போது ஒவ்வொரு இடத்திலும் அந்த மண்வளத்திற்கு ஏற்ற நம்முடைய பாரம்பரிய மரக்கன்றுகளை நடவு செய்ய வேண்டும்.

18 லட்சம் மரக்கன்றுகள்

புதிய மரக்கன்றுகளை நடவு செய்த பின்னர் பாதுகாப்பு கம்பி வேலிகள் அமைத்து முறையாக பராமரிக்க வேண்டும். குறிப்பாக நெடுஞ்சாலைகளில் மரங்களை நடவு செய்யும் போது உயரம் குறைவாக உள்ள மரக்கன்றுகளை தவிர்த்து குறைந்தது 6 அடி முதல் 8 அடி வரை உள்ள மர வகைகளை நடவு செய்ய வேண்டும்.

நம்முடைய மண்வளத்திற்கு ஏற்ற மரவகையில் குறித்த ஆலோசனைகளை மாவட்ட வனத்துறையிடமிருந்து பெற்று நடவு செய்ய வேண்டும்.

வேலூர் மாவட்டத்திற்கு இந்த ஆண்டு 18 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கினை அடுத்த மாதம் (அக்டோபர்) 15-ந் தேதிக்குள் அதாவது பருவமழை தொடங்குவதற்குள் நடவு செய்ய முனைப்புடன் செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்