கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியின்போது ஏ.வி. மேம்பாலத்தை சேதப்படுத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய கோரிக்கை
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியின்போது ஏ.வி. மேம்பாலத்தை சேதப்படுத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டது
மதுரை பா.ஜ.க மாநகர் மாவட்ட தலைவர் மகாசுசீந்திரன் தலைமையில் தாமரை சேவகன் குழுவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வக்கீல் முத்துக்குமார், மாவட்ட பார்வையாளர் சாம் சரவணன் மற்றும் மேற்கு தொகுதி ஒருங்கிணைப்பாளர் பிச்சைவேல் ஆகியோர் கலெக்டர் அனீஷ்சேகரை சந்தித்து ஒரு மனு அளித்தனர். அதில், மதுரையில் வருடந்தோறும் நடக்கும் சித்திரை திருவிழாவில் முக்கியமானது கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வாகும். இந்த நிகழ்வில் கடந்த வருடம் 4 பேரும், இந்த வருடம் 5 பேரும் பலியாகி உள்ளனர். இவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு அளிக்க கோரி மதுரை மாநகர் பா.ஜ.க. சார்பாக ஏற்கனவே மனு அளிக்கப்பட்டது. மேலும், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட ஏ.வி. மேம்பாலத்தின் ஒரு பகுதி தற்போது இடிக்கப்பட்டுள்ளது. நூறாண்டுகளுக்கும் மேலாக உறுதித்தன்மையுடன் விளங்கும் இந்த பாலத்தை இடித்திருப்பதால் பாலம் வலுவிழந்துள்ளது. பாலம் இடிப்பு சம்பவத்திற்கு இந்து அறநிலையத்துறையோ, மதுரை மாநகராட்சி நிர்வாகமோ, பொதுப்பணி துறையோ இதுவரை பொறுப்பேற்கவில்லை. அரசியல்வாதிகள் தங்கள் வசதிக்கேற்ப பாலத்தை இடித்திருக்க வாய்ப்புகள் அதிகம். இவ்வாறு அரசு சொத்தை சேதப்படுத்துவது இந்திய தண்டனை சட்டப்படி குற்றமாகும். தற்போது இடித்த இடத்தை வெளியில் தெரியாதவாறு மூடி மறைத்துள்ளனர். மேம்பாலத்தை இடித்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்று கொண்ட கலெக்டர், மனுவை மாநகர போலீஸ் கமிஷனருக்கு அனுப்பி தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.