பஸ் நிலையத்தில் இருந்து நேதாஜி சவுக்குவரை ஆட்டோக்களுக்கு அனுமதியில்லை

குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் திருவிழாவின்போது பஸ்நிலையத்தில் இருந்து நேதாஜி சவுக்குவரை மெயின்ரோட்டில் ஆட்டோக்களுக்கு அனுமதியில்லை என ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

Update: 2023-05-11 14:58 GMT

ஆலோசனை கூட்டம்

குடியாத்தம் கெங்கையம்மன் கோவிலில் வருகிற ஞாயிற்றுக்கிழமை தேரோட்டமும், திங்கட்கிழமை அம்மன் சிரசு ஊர்வலமும் நடைபெற உள்ளது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். திருவிழாவை முன்னிட்டு மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. திருவிழாவின்போது ஆட்டோக்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் உத்தரவிட்டார்.

அதன்பேரில் குடியாத்தம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முகேஷ்குமார், குடியாத்தம் மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜேஷ்கண்ணன் ஆகியோர், ஆட்டோ சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.

அனுமதி இல்லை

கூட்டத்தில் திருவிழாவின் போது குடியாத்தம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து நேதாஜி சவுக்கு வரை மெயின் ரோட்டில் ஆட்டோக்களுக்கு அனுமதி இல்லை எனவும், கெங்கையம்மன் கோவில் அருகில் உள்ள தெருக்களுக்கு முன்னதாகவே ஆட்டோ போக்குவரத்துக்கு அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. அதேபோன்று வெளி மாவட்ட, வெளிமாநில ஆட்டோக்களுக்கும் அனுமதி இல்லை.

ஆட்டோ டிரைவர்கள் கட்டாயம் சீருடை அணிந்திருக்க வேண்டும், மது அருந்துதல் கூடாது, ஓட்டுனர் உரிமம் மற்றும் உரிய சான்றுகள் கட்டாயம் வைத்திருக்க வேண்டும், ஆட்டோக்களில் அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றக் கூடாது. திருவிழாவின்போது போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் காவல்துறையுடன் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்