விதிமீறல் வாகனங்களை கண்டறிய சிக்னலில் தானியங்கி கண்காணிப்பு கேமரா- போலீஸ் கமிஷனர் லோகநாதன் பேச்சு

மதுரையில் விதிமீறல் வாகனங்களை கண் காணிக்க சிக்னலில் தானியங்கி கண் காணிப்பு கேமரா அமைக்கப்படும் என போலீஸ் கமிஷனர் லோகநாதன் தெரிவித்துள்ளார்.

Update: 2023-09-05 00:40 GMT


மதுரையில் விதிமீறல் வாகனங்களை கண் காணிக்க சிக்னலில் தானியங்கி கண் காணிப்பு கேமரா அமைக்கப்படும் என போலீஸ் கமிஷனர் லோகநாதன் தெரிவித்துள்ளார்.

சாலையில் வர்ணம் பூசும் பணி

மதுரை நகரின் மைய பகுதியான 4 மாசி வீதிகள், ஆவணிமூல வீதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் லோகநாதன் உத்தரவிட்டார். அதன் பேரில் போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக 4.6 கிலோ மீட்டர் சுற்றளவு உள்ள நான்கு மாசி வீதிகள், 2.5 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட நான்கு ஆவணி மூலவீதிகளில் உள்ள சாலை பகுதிகளில் 2 மற்றும் 4 சக்கர வாகனங்கள் நிறுத்துமிடங்களை நெறிபடுத்தி, அடையாளப்படுத்தும் விதமாக மஞ்சள் வண்ணத்தில் பெயிண்ட் பூச்சு மற்றும் மஞ்சள் நிற கயிறு பதிக்கும் பணி நேற்று நடந்தது.

போக்குவரத்து நெரிசலை குறைக்க

இதனை தெற்கு மாசி வீதி டி.எம்.கோர்ட் பகுதியில் போலீஸ் கமிஷனர் லோகநாதன் மஞ்சள் பெயிண்ட் சாலையில் வரைந்து அடையாள படுத்தி தொடங்கி வைத்தார். போக்குவரத்து துணை கமிஷனர் குமார், கூடுதல் துணை கமிஷனர் திருமலைக்குமார், உதவி கமிஷனர்கள் செல்வின், மாரியப்பன், இன்ஸ்பெக்டர்கள் கணேஷ்ராம், ரமேஷ்குமார், தங்கமணி, கார்த்தி, நந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் போலீஸ் கமிஷனர் லோகநாதன் கூறியதாவது,

மாசி மற்றும் ஆவணி மூல வீதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வண்ணம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதன் ஒரு பகுதியாக வாகனங்கள் நிறுத்துவதை அடையாளபடுத்தும் வகையில் மஞ்சள் நிறத்தில் பெயிண்ட் பூசப்பட்டுள்ளது. இதன் மூலம் போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

கடந்த மாதம் மட்டும் தலைக்கவசமின்றி இருசக்கர வாகனம் ஓட்டி சென்ற 28 ஆயிரத்து 506 பேர் மீதும், சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டிச் சென்ற 313 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நம்பர் பிளேட் விதிமீறல்

நகரில் சிக்னலில் உள்ள தானியங்கி கண்காணிப்பு கேமரா மூலம் விதிமீறில் ஈடுபடும் வாகனங்கள் மீது அபராதம் விதிகப்பட உள்ளது. வாகன நம்பர் பிளேட்டில் மாற்றம் செய்து செல்வதால் அந்த பகுதியில் உள்ள கேமரா மூலம் அந்த எண்ணை சரியாக கணிக்க முடியவில்லை.

எனவேதான் அரசு அறிவித்துள்ளபடி நம்பர் பிளேட்டில் நம்பரை எழுத வேண்டும் என்பதை வலியுறுத்தினோம். போதை பொருட்களை ஒழிக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் மூலம் ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.தற்போது ரூ.2 கோடியே 4 லட்சம் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்