பணம் எடுக்க சென்ற போது தானாக திறந்த ஏடிஎம் எந்திரம் - தலை தெறிக்க ஓடிய வாடிக்கையாளர்கள்

பணம் எடுக்க சென்ற போது ஏடிஎம் எந்திரம் தானாக திறந்ததால் வாடிக்கையாளர்கள் தலைதெறிக்க ஓடினர்.

Update: 2022-06-25 07:10 GMT

திருச்சி,

திருச்சி கண்டோன்மெண்ட் சேவா சங்கம் பள்ளி அருகே வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது.இந்த வங்கியில் பொதுமக்களின் பயன் பாட்டிற்காக ஏ.டி.எம். எந்திரம் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று வாலிபர்கள் இரண்டு பேர் பணம் எடுப்பதற்காக அங்கு சென்றுள்ளனர். அப்போது திடீரென ஏ.டி.எம் எந்திரத்தில் இருந்து அபாய மணி ஒலிக்க தொடங்கியதால் இருவரும் அங்கிருந்து ஓடியுள்ளனர்.

இதனை பார்த்த, ஏ.டி.எம். அருகே பூ கடை நடத்தி வரும் பெண் ஒருவர் உள்ளே சென்று பார்த்த போது ஏ.டி.எம் எந்திரம் உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே இது குறித்து கண்டோன்மெண்ட் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலின் அடிப்படையில் கண்டோன்மெண்ட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோதனை நடத்தினார்கள்.

அப்போது அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்த போது வாலிபர்கள் பணம் எடுக்க வந்த போது திடீரென் எந்திரம் திறந்து அபாய மணி ஒலிப்பது தெரிய வந்தது. வாலிபர்கள் வருவதற்கு முன்னதாக ஏ.டி.எம். எந்திரத்தில் வங்கி ஊழியர்கள் பணத்தை நிரப்புவது போன்றும், பின்னர் சரியாக ஏ.டி.எம் எந்திரத்தை மூடாமல் செல்வதும் தெரிய வந்தது.

மேலும் விசாரணையில் அந்த வாலிபர்கள் பணம் எடுக்க வந்ததும் ,திடீரென் அபாய மணி ஒலித்ததால் அங்கிருந்து ஓடியதாகவும் தெரிவித்தனர். இந்த சம்பவம் ஏ.டி.எம்.மில் பணம் நிரப்பிய வங்கி ஊழியர்களின் அலட்சியப் போக்கால் நடைபெற்றது என்பதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்