ஆட்டோ டிரைவர்கள் சாலைமறியலுக்கு முயற்சி

நெல்லை சந்திப்பில் ஆட்டோ டிரைவர்கள் சாலைமறியலுக்கு முயன்றனர்.

Update: 2022-12-31 19:41 GMT

நெல்லை சந்திப்பில் ஆட்டோ டிரைவர்கள் சாலைமறியலுக்கு முயன்றனர்.

ஆட்டோ டிரைவர்கள்

'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின்கீழ் நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் இடிக்கப்பட்டு புதிதாக கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து டவுன் பஸ்கள், புறநகர் பஸ்கள் நெல்லை சந்திப்பு பகுதிக்கு வராமல் எஸ்.என்.ஹைரோடு வழியாகவும், பொருட்காட்சி திடல் வழியாகவும் இயக்கப்படுகின்றன.

எனினும் நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு சர்குலர் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள் சந்திப்பு ரெயில் நிலையம் முன்பாக நிறுத்தப்பட்டு, ரெயிலில் வரும் பயணிகளை அழைத்து செல்கின்றன.

இதற்கு ரெயில் நிலைய ஆட்டோ ஸ்டாண்டு டிரைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் பஸ்களை ரெயில் நிலையம் முன்பாக நிறுத்தி வைக்க கூடாது. மதுரை ரோடு வழியாகவே பஸ்களை இயக்க வேண்டும் என்று வலியுறுத்தி கலெக்டர் மற்றும் அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்.

மறியலுக்கு முயற்சி

இந்த நிலையில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பாக நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பு தலைவர் மகாராஜன் தலைமையில், ஆட்டோ டிரைவர்கள் நேற்று மதியம் திரண்டனர். அவர்கள் ரெயில் நிலைய ஆட்டோ ஸ்டாண்டில் இருந்து ஊர்வலமாக மதுரை ரோட்டில் மறியலில் ஈடுபடுவதற்காக புறப்பட்டனர். இதையொட்டி அங்கு நெல்லை மாநகர மேற்கு போலீஸ் துணை கமிஷனர் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் மறியலுக்கு புறப்பட்டவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் ஆட்டோ டிரைவர்கள் மறியல் முயற்சியை கைவிட்டு, ரெயில் நிலையம் முன்பாக கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்