ஆட்டோ ஓட்டுனர்கள் உண்ணாவிரத போராட்டம்

அஞ்சுகிராமத்தில் ஆட்டோ ஓட்டுனர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update:2023-04-26 00:15 IST

அஞ்சுகிராமம், 

அஞ்சுகிராமத்தில் ஆட்டோ ஓட்டுனர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சாகும்வரை உண்ணாவிரதம்

அஞ்சுகிராமத்தில் அண்ணா ஆட்டோ தொழிற்சங்கம் நெல்லை-குமரி மெயின் ரோடு அருகில் ஆட்டோக்களை நிறுத்தி வருகிறது. இந்த சங்கத்திற்கும் அஞ்சுகிராமத்தில் செயல்பட்டு வரும் இன்னொரு ஆட்டோ சங்கத்திற்கும் இடையே ஆட்டோக்களை நிறுத்துவது தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு வருகிறது. இதுதொடர்பாக அண்ணா தொழிற்சங்கத்தினர் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தி நேற்று காலை 10 மணி முதல் அண்ணா ஆட்டோ தொழிற்சங்கத்தினர் தங்கள் ஆட்டோகளை ஓட்டாமல் நிறுத்தி வைத்து கொண்டு சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் குதித்தனர். இந்த போராட்டத்தில் சுமார் 40 ஆட்டோ ஓட்டுனர்கள் கலந்து கொண்டனர்.

ஒருவர் மயங்கி விழுந்தார்

போராட்டம் நடந்து கொண்டிருந்த போது இதில் கலந்து கொண்ட திரவியம் (வயது43) என்பவர் திடீரென மயங்கி விழுந்தார். இதனால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவரை சக ஆட்ேடா ஓட்டுனர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

தொடர்ந்து ஆட்டோ டிரைவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ராஜாக்கமங்கலம் இன்ஸ்பெக்டர் கண்ணன், அஞ்சுகிராமம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இந்த பிரச்சினை தொடர்பாக போலீஸ் நிலையத்தில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தி நிரந்தர தீர்வு காணப்படும் என போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து மாலை 4 மணியளவில் போராட்டம் முடிவுக்கு வந்தது. அதன்பின்பு அங்கு ஏற்பட்ட பரபரப்பு அடங்கியது.

----------------

(2 காலம்)

ஆட்டோ ஓட்டுனர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்திய போது எடுத்த படம்.

Tags:    

மேலும் செய்திகள்