ஆட்டோ டிரைவர் கொலை; தம்பி கைது

மயிலாடுதுறையில், குடும்ப தகராறில் ஆட்டோ டிரைவர் அடித்துக்கொலை செய்யிப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய தம்பியை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-06-02 17:25 GMT

மயிலாடுதுறை:-

மயிலாடுதுறையில், குடும்ப தகராறில் ஆட்டோ டிரைவர் அடித்துக்கொலை செய்யிப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய தம்பியை போலீசார் கைது செய்தனர்.

ஆட்டோ டிரைவர்

மயிலாடுதுறை ரெயிலடி தூக்கணாங்குளம் கீழ்கரை பகுதியை சேர்ந்தவர் சாமியப்பன்(வயது 52). ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி ராதா(38). சாமியப்பனின் தம்பி வீரமணி(38). இவர் செப்டிக் டேங்க் டிரைவர் ஆவார்.

நேற்று முன்தினம் சாமியப்பன் தனது ஆட்டோவில் ஒரு பெண்ணை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு சென்றார். இதனை கண்ட சாமியப்பனின் மனைவி ராதா, வேறொரு பெண்ணை எப்படி வீட்டிற்கு அழைத்து வரலாம்? என கேட்டு திட்டினார். இதனால் ஆத்திரம் அடைந்த சாமியப்பன், ராதாவை தாக்கினார். இந்த நிலையில் வீரமணியும், தனது அண்ணிக்கு ஆதரவாக அண்ணன் சாமியப்பனை திட்டினார்.

உருட்டுக்கட்டை அடி

இதனால் சாமியப்பனுக்கும், வீரமணிக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியது. அந்த நேரத்தில் வீரமணி அருகில் கிடந்த உருட்டுக்கட்டையை எடுத்து சாமியப்பனை அடித்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சாமியப்பன் மயங்கி கீழே விழுந்தார்.

இதையடுத்து அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதுதொடர்பாக மயிலாடுதுறை போலீசார் வீரமணி மீது கொலைமுயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

கொலை வழக்காக மாற்றம்

இந்த நிலையில் நேற்று அதிகாலை சாமியப்பன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதனையடுத்து மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம், கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்தார். பின்னர் கொலை வழக்கு தொடர்பாக வீரமணியை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்