கார் மோதி ஆட்டோ டிரைவர் பலி

வீரவநல்லூரில் கார் மோதி ஆட்டோ டிரைவர் பலியானார்.;

Update: 2023-05-17 19:34 GMT

சேரன்மாதேவி:

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பகுதியை சேர்ந்த ஜேம்ஸ் என்பவருடைய மகன் ராஜா (வயது 47). இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி தொழில் செய்து வந்தார். இந்நிலையில் வீரவநல்லூர் பைபாஸ் ரோட்டில் சாலையோரம் ராஜா தனது ஆட்டோவை நிறுத்திவிட்டு சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது தூத்துக்குடியை சேர்ந்த சாமுவேல் சாம்சன் என்பவர் அவரது குடும்பத்தினருடன் பாபநாசம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.

கார் வேகமாக வந்ததாக கூறப்படுகிறது. ராஜாவின் ஆட்டோ நின்ற பகுதி அருகே வந்தபோது கார் திடீரென நிலைதடுமாறி ராஜா மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராஜா உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், ராஜாவுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். இருப்பினும் ராஜா பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வீரவநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் வீரவநல்லூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்