செம்மஞ்சேரியில் கோவில் விழாவில் ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை

செம்மஞ்சேரி சுனாமி நகரில் கோவில் திருவிழாவில் முன்விரோதத்தால் ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.;

Update: 2022-08-22 12:55 GMT

சோழிங்கநல்லூரை அடுத்த செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு 5-வது நிழற்சாலை பகுதியில் விக்கி என்ற மைக்கா (வயது 27). ஆட்டோ டிரைவர். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று அந்த பகுதியில் மாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்ற நிலையில் நேற்று முன்தினம் இரவு 1 மணியளவில் நண்பர்களுடன் 6-வது நிழற்சாலைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து கிளம்பியுள்ளார். வீட்டை விட்டு சென்ற சிறிது நேரத்தில் விக்கியை 5 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக கத்தியால் வெட்டியதாக அவரது வீட்டுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்த அவரது குடும்பத்தினர் சம்பவ இடத்திற்கு சென்று உயிருக்கு போராடிய நிலையில் இருந்த விக்கியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ராயபேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். உடன் இருந்த சாமுவேல் என்பவரையும் மர்மநபர்கள் கத்தியால் வெட்டியுள்ளனர்.

தலை, கை, கைவிரல் என உடலில் பல இடங்களில் பலத்த வெட்டு காயத்துடன் சிகிச்சை பெற்று வந்த ஆட்டோ டிரைவர் விக்கி நேற்று காலை 9 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்து உயிரிழந்த விக்கியின் தந்தை ராஜா செம்மஞ்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து செம்மஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கரி என்ற ராமு, சின்னராசு, விநாயகம் என்ற கோட்டி, அப்பு என்ற ஜெயவேலு, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ஆட்டோ டிரைவர் விக்கியை கத்தியால் சரமாரியாக வெட்டி கொலை செய்தது தெரியவந்துள்ளது. மேலும் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட ராமுவை பிடித்து போலீஸ் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? இல்லை வேறு ஏதேனும் காரணமா ? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் தலைமறைவாக உள்ள மற்ற 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்