பள்ளி மாணவியை கடத்திய ஆட்டோ டிரைவர் போக்சோவில் கைது
தாராபுரம் அருகே 15 வயது பள்ளி மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்ற ஆட்டோ டிரைவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தாராபுரம்
தாராபுரம் அருகே 15 வயது பள்ளி மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்ற ஆட்டோ டிரைவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பள்ளி மாணவி கடத்தல்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே மளிகைக்கடைக்காரர் ஒருவரின் 15 வயது மகளான பள்ளி மாணவி கடந்த 13-ந் தேதி வீட்டில் இருந்து திடீரென மாயமானார். இது குறித்து பெற்றோர் தாராபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் அடிப்படையில் தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
விசாரணையின் போது அந்த மாணவியை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் ஆட்டோ டிரைவரும் காணவில்லை என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தாராபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் பல்வேறு இடங்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
ஆட்டோ டிரைவர்
இந்தநிலையில் போலீசாருக்கு கடந்த 20 நாட்களாக டிமிக்கி கொடுத்து வந்த ஆட்டோ டிரைவரை பெங்களூருவில் இருந்து சிறுமியுடன் போலீசார் மீட்டு தாராபுரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில் அவர் தாராபுரம் சின்னகாளியம்மன் கோவில் மேற்கு கச்சேரி வீதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் தவசி (வயது 23) என்பதும், சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றதும் தெரியவந்தது.
பள்ளி மாணவியை தினசரி ஆட்டோவில் ஏற்றி சென்று திரும்ப வீட்டுக்கு அழைத்து வந்து விடுவது வழக்கம். அந்த நேரத்தில் குடும்ப கதையை சொல்லி மாணவியுடன் பழக்கம் ஏற்படுத்தி, அதன் மூலம் கடத்திச் சென்றுள்ளதாக தெரிகிறது. மேலும் ஆட்டோ டிரைவர் தவசிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி கருத்து வேறுபாடு காரணமாக மனைவிகள் பிரிந்து சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
போக்சோவில் கைது
தலைமறைவாக இருந்த ஆட்டோ டிரைவர் தவசியை தாராபுரம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். ஆட்டோ டிரைவருக்கு ஏற்கனவே மனைவியும், கள்ள காதலியும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.