அதிவேகமாக செல்லும் டிப்பர் லாரிகளால் பொதுமக்கள் சாலை மறியல்
அதிவேகமாக செல்லும் டிப்பர் லாரிகளால் தொடரும் விபத்துகளை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.;
சாலை மறியல்
பெரம்பலூர் அருகே கல்பாடி கிராமத்தில் உள்ள கல்குவாரிகளில் இருந்து அறுமடல் கிராமத்தில் உள்ள கிரஷர்களுக்கு டிப்பர் லாரிகள் அதிக அளவில் சென்று வருகின்றன. இந்த நிலையில் இந்த லாரிகள் அதிவேகமாக செல்வதினால் இப்பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அதிவேகமாக செல்லும் லாரிகளை கண்டித்தும், இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுத்து நிறுத்த வேண்டும் எனக்கூறியும் அப்பகுதி மக்கள் காந்திநகர் அருகே க.எறையூர் சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மருவத்தூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
போக்குவரத்து பாதிப்பு
அப்போது பொதுமக்கள் போலீசாரிடம் கூறுகையில், கல்குவாரிகளில் இருந்து கிரஷர்களுக்கு செல்லும் லாரிகள் அனைத்தும், அதிவேகமாக செல்வதினால் இப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது. மேலும் குழந்தைகளை வெளியே அனுப்ப பெரிதும் அச்சமாக உள்ளது. மேலும் கற்களை ஏற்றிச்செல்லும் லாரிகள் மேலே தார்ப்பாய் போடாமல் செல்வதினால் காற்றில் துகல்கள் பறந்து லாரிகளின் பின்னால் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளின் கண்களை பாதிக்கிறது. எனவே இதனை அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர். இதற்கு பதில் அளித்த போலீசார், இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் க.எறையூர் சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.