நாமக்கல் மாவட்டத்திற்கு ஆக. 3-ல் உள்ளூர் விடுமுறை

உள்ளூர் விடுமுறை நாளை ஈடுசெய்யும் வகையில், ஆக. 12-ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.

Update: 2024-07-29 17:50 GMT

நாமக்கல்,

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது;

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் ஆண்டுதோறும் ஆக. 2, 3 தேதிகளில் வல்வில் ஓரி விழா கொண்டாடப்படும். அதன்படி நிகழாண்டில் தமிழக அரசின் சார்பில் வல்வில் ஓரி விழா, சுற்றுலா விழா மற்றும் மலர் கண்காட்சி கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி, அரசின் பல்துறை பணி விளக்கக் கண்காட்சி, கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

இவ்விழாவை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள், பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர், அரசு அலுவலர்கள், பல்வேறு துறை பணியாளர்கள் குடும்பத்துடன் கொல்லிமலைப் பகுதிக்கு வருவர் என்பதால், வரும் ஆக. 3-ஆம் தேதி (வியாழக்கிழமை) நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.

இந்த உள்ளூர் விடுமுறை நாளை ஈடுசெய்யும் வகையில், ஆக. 12-ஆம் தேதி (சனிக்கிழமை) பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறை நாளன்று மாவட்ட கருவூலம், சார்நிலைக் கருவூலங்கள், அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும். இந்த விடுமுறையானது வங்கிகளுக்கு பொருந்தாது."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்