வாக்குப்பதிவு எந்திரங்களை தணிக்கை செய்யும் பணி

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள குடோனில் வாக்குப்பதிவு எந்திரங்கள் தணிக்கை செய்யும் பணி நடந்தது. மேலும் தொகுதி வாரியாக பிரித்து வைக்கப்படுகிறது.

Update: 2023-09-14 17:32 GMT

எந்திரங்கள் தணிக்கை

வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு குடோன் அமைந்துள்ளது. இங்கு வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளுக்கு பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் எந்திரங்கள் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இந்த எந்திரங்கள் 3 மாதத்திற்கு ஒருமுறை தணிக்கை செய்ய வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி நேற்று கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராகவன் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் குடோன் திறக்கப்பட்டது. தொடர்ந்து குடோனில் இருந்த எந்திரங்கள் தணிக்கை செய்யப்பட்டன. அப்போது தேர்தல் பிரிவு தாசில்தார் சத்தியமூர்த்தி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

தொகுதி வாரியாக...

இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:-

வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு எந்திரங்கள் குடோனில் வைக்கப்பட்டுள்ளன. இங்கு 4,879 வாக்குப்பதிவு எந்திரங்களும், 2,096 கட்டுப்பாட்டுக் கருவிகளும், 1,937 யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் எந்திரங்களும் என மொத்தம் 8,912 எந்திரங்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதை தணிக்கை செய்யும் பொருட்டு குடோன் திறக்கப்பட்டது.

மேலும் தொகுதி வாரியாக எந்திரங்கள் பிரித்து வைக்கும் பணியும் நடைபெற உள்ளது. ஏனெனில் தேர்தலை ஒட்டி எந்திரங்கள் தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் போது எந்திரங்கள் மாற வாய்ப்பு உள்ளது. இதை தவிர்க்கும் பொருட்டு இந்த பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் மூலம் எந்திரங்கள் அந்தந்த தொகுதிகளுக்கு குழப்பம் இல்லாமல் அனுப்பி வைக்க உதவியாக இருக்கும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்