கடைகள் ஏலம் 4-வது முறையாக ரத்து

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் கடைகளை ஏலம் விடுவது 4-வது முறையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடுமையாக அவதியடைந்து வருகின்றனர்.;

Update: 2022-11-23 14:00 GMT

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் கடைகளை ஏலம் விடுவது 4-வது முறையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடுமையாக அவதியடைந்து வருகின்றனர்.

புதிய பஸ் நிலையம்

வேலூர் புதிய பஸ் நிலையம் ரூ.52 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. இங்கிருந்து சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. பஸ் நிலையத்தில் தரை தளம் மற்றும் முதல் தளத்தில் 85 அறைகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றில் 7 அறைகள் 24 மணி நேரமும் இயங்கும் முதலுதவி அறை, தாய்மார்கள் பாலூட்டும் அறை, பயணிகள் ஓய்வு அறை, போக்குவரத்து ஊழியர்களுக்கு 2 ஓய்வு அறைகள், காவலர் அறை, காவல் கண்காணிப்பு கேமராக்கள் அறைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

அதைத்தவிர ஆவின் நிறுவனம் உள்ளிட்ட அரசு நிறுவனங்களுக்கு சில அறைகள் கடைகளாக மாற்றப்பட்டு, ஒதுக்கீடு செய்யப்பட்டது. மீதமுள்ள 68 கடைகள் ஏலம் விடப்படாமல் உள்ளது.

பயணிகள் அவதி

இந்த புதிய பஸ் நிலையத்தை கடந்த ஜூன் மாதம் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். திறந்து வைத்ததில் இருந்து தற்போது வரை கடைகள் இல்லாததால் பயணிகள் கடுமையான சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

அதிக வாடகை மற்றும் கோர்ட்டில் வழக்கு உள்ளதால் புதிய பஸ் நிலையத்தில் கடைகள் ஏலம் விடாமல் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே 3 முறை ஏலம் ஒத்தி வைக்கப்பட்டது. இதற்கிடையே நேற்று ஏலம் விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த முறையும் புதிய பஸ் நிலைய கடைகள் ஏலம் ரத்தாகி உள்ளது.

கோர்ட்டில் வழக்கு

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் ஏற்கனவே கடைகள் வைத்திருந்த 12 பேர் தங்களுக்கு கடைகள் ஒதுக்குவதில் முன்னுரிமை அளிக்க வேண்டுமென சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அவர்களுக்கு கடைகள் ஒதுக்கீட்டில் முன்னுரிமை அளிக்க கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் கோர்ட்டு உத்தரவுப்படி ஒருவர் மட்டுமே மாநகராட்சியில் பணம் செலுத்தினார். மற்றவர்கள் பணம் செலுத்தவில்லை. அவர்களில் மீண்டும் 8 பேர் கடைகள் ஒதுக்குவது சம்பந்தமாக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதில் 4 பேர் ஏற்கனவே மாநகராட்சிக்கு ரூ.40 லட்சம் வரை வாடகை பாக்கி செலுத்த வேண்டியுள்ளது.

வாடகை பாக்கி குறித்து மாநகராட்சி சார்பில் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவர்களுக்கு கடை ஒதுக்குவது ரத்து செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் இன்னும் 5 பேருக்கு கடை ஒதுக்குவது சம்பந்தமாக முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. அவர்களுக்கு குலுக்கல் முறையில் கடைகள் ஒதுக்கப்படும். அதற்கு பிறகு கடைகள் ஏலம் நடைபெறும். அதற்கான தேதி அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்