கோவிந்தபேரி கூட்டுறவு சங்க மோசடி: செயலாளர், பணியாளர் சொத்துக்கள் ஏலம்

கோவிந்தபேரி கூட்டுறவு சங்க மோசடியில் செயலாளர், பணியாளர் சொத்துக்கள் ஏலம் விடப்பட்டது;

Update: 2022-09-23 18:45 GMT

கடையம்:

கடையம் அருகே ரவணசமுத்திரத்தில் கோவிந்தபேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு வங்கி செயலாளர் ஷாஜகான், பணியாளர் முத்துசெல்வி ஆகியோர் கூட்டாக சேர்ந்து உறுப்பினர்களின் சேமிப்பு பணத்தை மோசடியாக எடுத்து கையாடல் செய்தனர்.

இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் பாதிக்கப்பட்டவர்கள் பணத்தை திருப்பி தர கோரியும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பாக பல்வேறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். அமைச்சர்களிடம் மனு கொடுக்கப்பட்டன.

இதனையடுத்து மோசடி செய்த இருவர்கள் மீதும் விசாரணை செய்யப்பட்டதில் சுமார் ஒரு கோடி ரூபாய் வரை உறுப்பினர்கள் பணத்தை கையாடல் செய்தது உறுதியானது. இந்த நிலையில் இருவரது சொத்துகளும் ஜப்தி செய்யப்பட்டன.

இந்தநிலையில் சேரன்மகாதேவி சரக துணைப்பதிவாளர் முத்துசாமி உத்தரவின்படி, கூட்டுறவு சார்பதிவாளர் (சட்டப்பணி) மாடசாமி, கூட்டுறவு சார்பதிவாளர் கள அலுவலர் பொன்ராஜ், கூட்டுறவு சார்பதிவாளர் விற்பனை அலுவலர் உமா மகேஸ்வரி ஆகியோரது முன்னிலையிலும், கூட்டுறவு சங்க தலைவர் உச்சிமாகாளி தலைமையில் கூட்டுறவு சங்க வளாகத்தில், மோசடியில் ஈடுபட்ட இருவரின் சொத்துகள் ஏலம் விடப்பட்டது.

10 பேர் கலந்து கொண்டு ஏலம் கேட்டனர். இதில் பணியாளர் முத்துசெல்வியின் கீழக்கடையத்தில் உள்ள வீடு ரூ.23.18 லட்சத்திற்கும், செயலாளர் ஷாஜகானின் ரவணசமுத்திரத்தில் உள்ள வீடு ரூ.20 லட்சத்திற்கும் ஏலம் போனது. மேலும் முழுமையான சொத்துக்கள் ஜப்தி செய்யப்பட்டு ஏலம் விடப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதில் துணைத்தலைவர் சுப்பையா பாண்டியன், நிர்வாக குழு உறுப்பினர்கள் பிச்சையா, ராசு, செயலாளர் (பொ) முத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்