பாசன குளத்தின் கரையை உடைத்து மண் கடத்த முயற்சி

ஆற்றூரில் குளத்தின் கரையை உடைத்து மண் கடத்த மர்ம நபர்கள் முயன்றனர். இதனை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-02-09 21:08 GMT

திருவட்டார்:

ஆற்றூரில் குளத்தின் கரையை உடைத்து மண் கடத்த மர்ம நபர்கள் முயன்றனர். இதனை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

100 ஏக்கர் பாசன குளம்

ஆற்றூர் குட்டக்குழி சாலையில் தொழிச்சல் ஈயான் குளம் உள்ளது. சுமார் 3 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குளத்தில் இருந்து அந்த பகுதியை சுற்றியுள்ள 100 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெற்று வந்தன. இதனால், அந்த பகுதியில் முக்கிய நீர் ஆதாரமாக இந்த குளம் விளங்கி வந்தது. குளத்தையொட்டிய பகுதிகளில் பல ஏக்கர் தென்னை, வாழை, ரப்பர், மரச்சீனி கிழங்கு பயிடப்பட்டுள்ளது.

முன்பு இந்த குளம் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பாழ்பட்டு செடி, கொடிகள் வளர்ந்ததுடன், சிறுவர்களின் விளையாட்டு மைதானமாக காணப்பட்டது. குளத்தை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்று பொதுமக்கள் அரசிடம் கோரிக்கை வைத்தனர்.

மண் கடத்த முயற்சி

அதைதொடர்ந்து பொதுப்பணித்துறை மூலமாக டெண்டர் விடப்பட்டு குளத்தில் இருந்து வண்டல் மண் எடுக்கப்பட்டது. அந்த வண்டல் மண் தாழ்வான பகுதியில் உள்ள விளைநிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதற்கு சிலர் எடுத்துச் சென்றனர். மேலும் 15 அடிக்குமேல் குளத்தை ஆழப்படுத்தியதால் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து மண் எடுப்பு பணிகள் நிறுத்தப்பட்டு அருகில் உள்ள ஓடையில் இருந்து குளத்துக்கு தண்ணீர் நிரப்பப்பட்டது. தற்போது குளம் கடல்போல் காட்சி அளிக்கிறது.

இந்த நிலையில் குளத்தையொட்டியுள்ள பகுதியில் இருந்து மீண்டும் மண் எடுக்க சமூக விரோதிகள் சிலர் திட்டமிட்டுள்ளனர். இதற்காக நேற்று முன்தினம் குளத்தின் கரையையொட்டிய பகுதியில் உடைப்பை ஏற்படுத்தி தண்ணீரை வெளியேற்றி உள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்த பொதுமக்கள் விரைந்து சென்று உடைக்கப்பட்ட கரைப்பகுதியை மண்ணிட்டு அடைத்தனர். ஆனாலும், அந்த பகுதியில் தண்ணீர் கசிந்து வெளியேறிக் கொண்டிருக்கிறது.

பொதுமக்கள் கோரிக்கை

குளத்தில் தண்ணீர் நிரப்பப்பட்டதில் இருந்தே மர்ம நபர்கள் அடிக்கடி கரையை உடைத்து பொக்லைன் எந்திரம் மூலம் மண் கடத்த முயற்சிகள் செய்து வருவதாக கூறப்படுகிறது. எனவே, குளத்தின் கரைகளை பலப்படுத்தி மண் கடத்தல் முயற்சியை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்