அரிவாளால் வெட்டி பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி; வாலிபருக்கு வலைவீச்சு
போடி அருகே அரிவாளால் வெட்டி பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
போடி அருகே உள்ள சங்கராபுரத்தை சேர்ந்தவர் முத்து. இவரது மனைவி சிவரஞ்சனி (வயது 35). இவர், நேற்று முன்தினம் மாலை தனது வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர், சிவரஞ்சனி கழுத்தில் அணிந்திருந்த நகையை பறிக்க முயன்றார். அப்போது சுதாரித்துக்கொண்ட அவர் தனது நகையை கைகளால் இறுக்க பிடித்துக்கொண்டார். இதனால் அந்த வாலிபரால் நகையை பறிக்க முடியவில்லை. அப்போது ஆத்திரமடைந்த அந்த வாலிபர், சிவரஞ்சனியை மிரட்டி நகையை தருமாறு கேட்டார். அவர் தர மறுக்கவே அந்த வாலிபர் அரிவாளால் சிவரஞ்சனியை வெட்டினார். இதில், அவர் அபயகுரல் எழுப்பினார். உடனே அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து போடி தாலுகா போலீஸ் நிலையத்தில் சிவரஞ்சனி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சிவரஞ்சனியை அரிவாளால் வெட்டி நகை பறிக்க முயன்ற வாலிபர், சங்கராபுரத்தை சேர்ந்த அழகர் மகன் மனோஜ் (29) என்பது தெரியவந்தது. இவர் மீது ஏற்கனவே போலீஸ் நிலையத்தில் திருட்டு, நகை பறிப்பு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதையடுத்து தலைமறைவான மனோஜை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.