கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் முகாமில் சப்-இன்ஸ்பெக்டரை பீர் பாட்டிலால் குத்தி கொல்ல முயற்சி

கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் சப்-இன்ஸ்பெக்டரை உடைந்த பீர் பாட்டிலால் குத்தி கொல்ல முயன்ற ரவுடியை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.;

Update: 2023-03-14 09:15 GMT

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகம் அருகே இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் உள்ளது. இந்த திறந்தவெளி முகாமில் வசித்து வருபவர் இலங்கை மன்னாரைச்சேர்ந்த ராபின்சன் (வயது 38). இவர் மீது வழிப்பறி உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளது.

இந்த நிலையில், நேற்று காலை முகாமை சேர்ந்த சிலர் முகாமையொட்டி மூடப்பட்ட வாகன கட்டுமான தொழிற்சாலையின் சுவர் ஏறி குதித்து அங்கு திருட முயன்று உள்ளனர். அதில் ஒருவர் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாவலரான வழுதிலம்பேடு கிராமத்தை சேர்ந்த முத்து (55) என்பவரை உண்டிகோலால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த முத்து கும்மிடிப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இது குறித்து தகவலறிந்து முகாமிற்கு கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விரைந்து சென்றனர். அப்போது போலீசார் விசாரணையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்டது முகாமைச்சேர்ந்த பழைய குற்றவாளியான ரவுடி ராபின்சன் என்பது தெரியவந்தது.

இதையடுத்து முகாமில் பதுங்கி இருந்த ரவுடி ராபின்சன், போலீசார் சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். அப்போது போலீசார் தன்னை பிடித்து விடுவார்கள் என்று கருதிய ரவுடி ராபின்சன் தனது உடைகளை கழற்றி எரிந்தார். பின்னர் பிடிக்க முயன்ற கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் என்பவரையும், தனிப்பிரிவு காவலர் ராமதாஸ் என்பவரையும் உடைந்த பீர் பாட்டிலால் தாக்க ராபின்சன் முற்பட்டார்.

ஒரு கட்டத்தில் கொலை செய்யும் நோக்கத்தில் சப்-இன்ஸ்பெக்டர் சுரேசை மட்டும் குறி வைத்து உடைந்தத பீர் பாட்டிலால் பலமுறை அவரை குத்த ராபின்சன் முயன்றதாக தெரிகிறது. அப்போது சமார்த்தியமாக தடுத்ததால் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் உயிர் தப்பினார். பின்னர் போலீசாரை சமாளிக்க முடியாத ராபின்சன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து போலீசார் அங்கிருந்து ஜீப்பில் புறப்பட்டு விட்டனர்.

இந்த சம்பவம் திருவள்ளூர் மாவட்டத்தில் போலீசார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து முகாமைச்சேர்ந்த ரவுடி ராபின்சன்னை தனிப்படை அமைத்து வலைவீசி தேடிவருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்