செல்போன் கடையில் திருட்டு முயற்சி
செல்போன் கடையில் திருட்டு முயற்சி நடந்துள்ளது.;
பெரம்பலூர்-எளம்பலூர் ரோடு சேவா நகரை சேர்ந்தவர் கனகராஜன். இவரது மகன் மணிகண்டன் (வயது 27). இவர் பெரம்பலூர் ரோவர் பள்ளி செல்லும் சாலையோரத்தில் உள்ள வாடகை கட்டிடத்தில் கடந்த 6 மாதங்களாக செல்போன் விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடை வைத்து நடத்தி வருகிறார். மணிகண்டன் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வியாபாரத்தை முடித்துக்கொண்டு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் அவர் நேற்று காலை கடையை திறக்க வந்த போது, கடை ஷட்டர் கதவின் 2 பூட்டுகளும் உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அவர் கடையின் உள்ளே சென்று பார்த்தபோது ஏதும் திருடு போகாததால் நிம்மதி பெருமூச்சு விட்டார். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி திருட்டு முயற்சியில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.