தபால் நிலையத்தில் கொள்ளை முயற்சி

இரணியலில் தபால் நிலையத்தில் மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். அங்கு லாக்கரை உடைக்க முடியாததால் அதில் இருந்த ரூ.4 லட்சம் தப்பியது.

Update: 2023-05-30 18:45 GMT

திங்கள்சந்தை:

இரணியலில் தபால் நிலையத்தில் மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். அங்கு லாக்கரை உடைக்க முடியாததால் அதில் இருந்த ரூ.4 லட்சம் தப்பியது.

தபால் நிலையம்

இரணியலில் போலீஸ் நிலையம் முன்பு நெய்யூர் துணை தபால் நிலையம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் மாலையில் பணிகள் முடிந்த பின்பு ஊழியர்கள் தபால் நிலையத்தை பூட்டிவிட்டு ெசன்றனர். பின்னர் நேற்று காலையில் வழக்கம் போல் ஊழியர்கள் பணிக்கு வந்தனர்.

அப்போது தபால் நிலையத்தின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது அங்கு பொருட்கள் சிதறி கிடந்தன.

இதுகுறித்து இரணியல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கிறிஸ்டி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில் நேற்று முன்தினம் இரவு யாரோ மர்ம நபர்கள் தபால் நிலையத்தின் முன்பக்க மர கதவின் பூட்ைட உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். அவர்கள் அங்கு இருந்த லாக்கரை உடைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதையடுத்து தபால் நிலையத்தில் இருந்த பொருட்களை தாறுமாறாக வீசி விட்டு தப்பி சென்றது தெரிய வந்தது.

ரூ.4 லட்சம் தப்பியது

தபால் நிலையத்தில் இருந்த லாக்கரில் ரூ.4 லட்சம் பணம் வைக்கப்பட்டிருந்தது. அதை மர்ம நபர்களால் உடைக்க முடியாததால் அதில் இருந்த பணம் தப்பியது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த ரேகைகள் பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக இங்கு பணிபுரியும் தபால்காரர் மற்றும் ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

கொள்ளை முயற்சி நடந்த தபால் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா வசதி இல்லை. இதனால், மர்ம நபர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் கைப்பற்றி மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

போலீஸ் நிலையம் முன்பு தபால் நிலையத்தில் கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்