தபால் நிலையத்தில் கொள்ளை முயற்சி
புளியங்குடி அருகே தபால் நிலையத்தில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
புளியங்குடி:
புளியங்குடி அருகே முள்ளிக்குளம் பஸ்நிறுத்தம் அருகில் தபால் நிலையம் உள்ளது. இங்கு புளியங்குடியை சேர்ந்த சித்ரா தபால்நிலைய அலுவலராக பணியாற்றி வருகிறார். மேலும் முள்ளிகுளத்தைச் சேர்ந்த சித்தரஞ்சனி உள்ளிட்ட 4 பேர் ஊழியர்களாக பணிபுரிகின்றனர். கடந்த 12-ந்தேதி வேலை முடிந்ததும் ஊழியர்கள் வழக்கம் போல் அலுவலகத்தை பூட்டி சென்றனர். நேற்று காலை சித்தரஞ்சனி அலுவலகத்துக்கு வந்தார். அப்போது அலுவலக கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து தபால்நிலைய அலுவலர் சித்ராவுக்கு தகவல் தெரியவரவே, அவர் கோவில்பட்டி தபால் அலுவலக பிரிவு இன்ஸ்பெக்டர் செண்பகராஜூக்கு தகவல் தெரிவித்தார். உடனே அவர் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தபோது, மர்மநபர்கள் தபால் அலுவலக பாதுகாப்பு அறையில் உள்ள இரும்பு பெட்டியை உடைக்க முயன்றதும், ஆனால் உடைக்க முடியாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றதும் தெரியவந்தது. இதனால் இரும்பு பெட்டியில் இருந்த ரூ.52 ஆயிரம் கொள்ளை போகாமல் தப்பியது. இதுகுறித்து தபால்நிலைய அலுவலர் சித்ரா புளியங்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.