கொள்ளை முயற்சி

திருவாரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அலாரத்தின் வயரை துண்டித்து ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது. இதில் அந்த எந்திரத்தில் இருந்த ரூ.13 லட்சம் தப்பியது.

Update: 2023-09-09 18:45 GMT

திருவாரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அலாரத்தின் வயரை துண்டித்து ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது. இதில் அந்த எந்திரத்தில் இருந்த ரூ.13 லட்சம் தப்பியது.

ஏ.டி.எம். மையம்

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டிட வளாகத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதன் அருகில் வங்கி ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி மற்றும் ஏ.டி.எம். மையத்தை விளமல், தண்டலை உள்ளிட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

நேற்று 2-வது சனிக்கிழமை என்பதால் வங்கி விடுமுறை விடப்பட்டது. அதேபோல் கலெக்டர் அலுவலக கட்டிடத்தில் இயங்கி வரும் முதன்மை கல்வி அலுவலகம், சமூக நலத்துறை உள்ளிட்ட அலுவலகங்களுக்கும் வார விடுமுறை விடப்பட்டதால் பொதுமக்கள் நடமாட்டமின்றி காணப்பட்டது.

ஏ.டி.எம்.எந்திரம் உடைப்பு

நேற்று மதியம் வாடிக்கையாளர் ஒருவர் வங்கி ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்றுள்ளார். அங்கு ஏ.டி.எம். எந்திரத்தின் முன்பக்கம் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து அவர் உடனடியாக திருவாரூர் தாலுகா போலீசிற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஏ.டி.எம். எந்திரத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

அலாரத்திற்கான வயர் துண்டிப்பு

ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி நடந்திருந்தால் எச்சரிக்கை அலாரம் அடித்து இருக்க வேண்டும். ஆனால் அலாரம் அடிக்கவில்லை என்பதால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

பின்னர் அங்கு பார்வையிட்டபோது அலாரத்திற்கான வயர் துண்டிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

ரூ.13 லட்சம் தப்பியது

இதையடுத்து வங்கி அதிகாரிகள் மூலம் ஏ.டி.எம். மையத்தை ஆய்வு செய்தபோது அந்த ஏ.டி.எம். எந்திரத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ.13 லட்சம் பத்திரமாக இருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து திருவாரூர் தாலுகா போலீசில் வங்கி கிளை மேலாளர் கார்த்திகேயன் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஏ.டி.எம். மையம் அருகில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தினர்.

மர்ம நபர்கள்

இந்த விசாரணையில், ஏ.டி.எம். மையத்தில் நுழைந்த மர்ம நபர் ஒருவர் தனது முகத்தை மறைத்துக்கொண்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதும், மற்றொருவர் அலாரத்தின் வயரை துண்டித்து ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்ததும் தெரிய வந்தது.

இந்த கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Tags:    

மேலும் செய்திகள்