சேலத்தில் ரெயில் மறியலுக்கு முயற்சி:மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 195 பேர் கைதுபோலீசாருடன் தள்ளுமுள்ளு-வாக்குவாதம்

Update: 2023-09-07 19:46 GMT

சேலம்

விலைவாசி உயர்வை குறைக்க வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் நேற்று ெரயில் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் மறியலுக்கு முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 195 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மறியலில் ஈடுபட முயன்றபோது போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

மறியல் போராட்டம்

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறியதாக கூறி, மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சேலம் மாவட்டத்தில் 11 இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது. பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்க வேண்டும், பெட்ரோல், டீசல் மீதான வரிகளை கட்டுப்படுத்த வேண்டும், விவசாய விளை பொருட்களுக்கு கட்டுப்படியான விலையை தீர்மானிக்க வேண்டும், பொது வினியோக திட்டத்தை பலப்படுத்த வேண்டும், கிராமப்புற மக்களின் வேலை உறுதிதிட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது.

சேலம் ஜங்ஷன் ெரயில் நிலையத்தின் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சண்முகராஜா தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

தள்ளுமுள்ளு

தொடர்ந்து ஜங்ஷன் ெரயில் நிலையத்திற்குள் நுழைய முயன்ற போராட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது அவர்கள் இடையே வாக்குவாதமும் நடந்ததால் பரபரப்பு நிலவியது.

இதைத்தொடர்ந்து ரெயில் நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேநேரத்தில், சேலம் மேற்கு மாநகர செயலாளர் கனகராஜ் தலைமையில் ெரயில் நிலையத்தின் தென்பகுதியில் வழியாக ரெயில் நிலையத்துக்குள் நுழைந்த கட்சியினர் 4-வது நடைமேடைக்கு வந்து அந்த வழியாக புறப்பட தயாராக இருந்த ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அவர்களை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் கைது செய்ததுடன், நுழைவு வாசலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களையும் கைது செய்தனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 21 பெண்கள் உள்பட 195 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த போராட்டம் காரணமாக, சேலம் ஜங்ஷன் ெரயில் நிலைய வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்