திருச்சி விமான நிலையத்தில் ரூ.14 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்களை கடத்த முயற்சி - ஒருவர் கைது
பயணியின் கைப்பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 14 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அமெரிக்க டாலர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருச்சி,
திருச்சி விமான நிலையம் வழியாக வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விமான பயணிகளிடம் தீவிர சோதனை மேற்கொண்டனர். அந்த வகையில் திருச்சியில் இருந்து கோலாலம்பூர் செல்லும் விமானத்தின் பயணிகளுக்குச் சொந்தமான உடமைகள் சோதனை செய்யப்பட்டன.
அப்போது பயணி ஒருவர் தான் எடுத்து வந்த கைப்பையில் அமெரிக்க டாலர்களை மறைத்து கடத்த முயற்சித்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து 13 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அமெரிக்க டாலர் நோட்டுகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், கடத்தலில் ஈடுபட்ட நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.