சென்னை,
வேலூர் மாவட்டம், பாகாயம், மேட்டு இடையம் பட்டியைச் சேர்ந்தவர் லூர்துமேரி (வயது 55). இவர் நேற்று சென்னை கோட்டை முன்பு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டார். தலையில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை தீக்குளிக்க விடாமல் போலீசார் தடுத்து விட்டனர். அவர் கோரிக்கை மனு ஒன்றை போலீசாரிடம் கொடுத்தார். அதில் கூறி இருப்பதாவது:-
எனது வீட்டை, அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் ஒருவர் இடித்து விட்டார். அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போலீசில் புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அந்த புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். பின்னர் அவர் கோட்டை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டார்.
இந்த சம்பவம் கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.