தேனி கலெக்டர் அலுவலகத்தில் உடலில் பெட்ரோல் ஊற்றி பெண் தீக்குளிக்க முயற்சி
தேனி கலெக்டர் அலுவலகத்தில், கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உடலில் பெட்ரோல் ஊற்றி பெண் தீக்குளிக்க முயன்றார்.
தேனி கலெக்டர் அலுவலகத்தில், கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உடலில் பெட்ரோல் ஊற்றி பெண் தீக்குளிக்க முயன்றார்.
தீக்குளிக்க முயற்சி
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே சுக்காங்கல்பட்டியை சேர்ந்த கணேசன் மகள் முத்துலட்சுமி (வயது 36). இவர் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று காலை வந்தார். அவர் ஒரு பாட்டிலில் பெட்ரோல் கொண்டு வந்தார். முத்துலட்சுமி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நின்று கொண்டு தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார்.
அப்போது கலெக்டர் அலுவலக டிரைவர் ஒருவர் முத்துலட்சுமி கையில் வைத்திருந்த தீப்பெட்டியை பறித்தார். பின்னர் அங்கிருந்த அலுவலர்கள் அவர் மீது தண்ணீரை ஊற்றினர். தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சிந்து அங்கு வந்து அந்த பெண்ணிடம் விசாரித்தார்.
கணவர் மீது புகார்
அப்போது முத்துலட்சுமி கூறுகையில், "எனக்கு 2007-ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். எனது கணவர் விவாகரத்து ஆகிவிட்டதாக கூறி பல பெண்களை ஏமாற்றி பணம், நகை, காசோலை மோசடிகளில் அவர் ஈடுபட்டுள்ளார். என்னையும் கொடுமை செய்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உத்தமபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தேன். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. அவரிடம் இருந்து எனது பணம், நகையை மீட்டுக்கொடுக்க வேண்டும். பல பெண்களை ஏமாற்றிய அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தீக்குளிக்க முயற்சித்தேன்" என்றார்.
பரபரப்பு
மேலும், பெட்ரோல் ஊற்றியதால் உடலில் எரிச்சல் ஏற்பட்டுள்ளதாக கூறி முத்துலட்சுமி வலியால் துடித்தார். அவரை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைப்பதற்காக 108 ஆம்புலன்சுக்கு கலெக்டர் அலுவலக ஊழியர்கள் தகவல் கொடுத்தனர். ஆம்புலன்ஸ் வருவதற்கு தாமதமானதால் சுமார் அரை மணி நேரம் அவர் வேதனையில் துடித்துக்கொண்டிருந்தார். பின்னர் வந்த ஆம்புலன்சில் அவர் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இதுகுறித்து தேனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.