ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் தாய்-மகள் உள்பட 3 பெண்கள் தீக்குளிக்க முயற்சி

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் தாய்-மகள் உள்பட 3 பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2022-06-20 20:47 GMT

ஈரோடு:

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் தாய்-மகள் உள்பட 3 பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தீக்குளிக்க முயற்சி

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள ஒலகடம் பகுதியை சேர்ந்த ஜோதிமணி, தனது தாய் நல்லம்மாள் மற்றும் உறவினர் நேத்ரவதி ஆகியோருடன் மனு கொடுக்க கலெக்டர் அலுவலகம் வந்தார். பின்னர் ஜோதிமணி திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெய் கேனை எடுத்து 3 பேரும் தீக்குளிக்க முயன்றனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஓடிச்சென்று அவரிடம் இருந்து மண்எண்ணெய் கேனை பிடுங்கினார்கள். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. பின்னர் போலீசார் அவர்களுக்கு அறிவுரை கூறி தாங்கள் கொண்டு வந்த மனுவை கொடுத்துவிட்டு செல்லும்படி கூறினர். இதைத்தொடர்ந்து ஜோதிமணி தான் கொண்டு வந்த மனுவை கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்தார்.

ரூ.25 லட்சம் கடன்

அந்த மனுவில் அவர் கூறி இருந்ததாவது:-

நான் மேற்கண்ட முகவரியில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். எனது கணவர் பழனிவேல் ஒலகடத்தில் டெக்ஸ்டைல் தொழில் செய்து வருகிறார். எனக்கும், எனது மகன் சசிகுமாருக்கும் ஒலகடம் கிராமத்தில் நிலம் உள்ளது. இந்த நிலத்தை, ஜம்பை கிராமத்தை சேர்ந்த ஒருவரிடம் தொழில் நிமித்தமாகவும், அவசர தேவைக்காகவும் ரூ.25 லட்சம் கடனாக கேட்டேன். அதற்கு அவர், கிரைய உடன்படிக்கை பத்திரம் எழுதி கொள்ளலாம் என்றும், கடன் தொகைக்கு ரூ.100-க்கு மாதம் 2.50 வட்டியாக கொடுக்க வேண்டும் என்றும் கூறி பத்திரம் தயார் செய்தார்.

அவர் தயார் செய்த பத்திரத்தில் எங்களிடம் கையொப்பமிட சொல்லி சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து கொண்டார். கடந்த 2011-ம் ஆண்டு ரூ.1 லட்சத்தை வட்டியாக எடுத்துக்கொண்டு ரூ.24 லட்சத்தை அவர் கொடுத்தார். இதைத்தொடர்ந்து 60 மாதங்கள் வட்டியாக மாதம் தோறும் ரூ.62 ஆயிரத்து 500 வீதம் ரூ.37 லட்சத்து 50 ஆயிரத்தை அவர் பெற்றுக்கொண்டார்.

அபகரிக்கும் நோக்கம்

அதன் பின்னர் நாங்கள் அசல் தொகையை கொடுத்து விடுகிறோம் என்று கூறியதற்கு அவர் பதில் எதுவும் சொல்லாமல் காலம் தாழ்த்தி வந்தார். இது தொடர்பாக நாங்கள் பவானி சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். இதைத்தொடர்ந்து அவர் எங்களிடம் சமாதானம் பேசி ரூ.25 லட்சத்தை பெற்றுக் கொண்டு நிலத்தை கொடுப்பதாக கூறினார். அதன்படி நாங்கள் முதல் கட்டமாக ரூ.9 லட்சத்து 50 ஆயிரம் கொடுத்தோம்.

மீதி தொகையான ரூ.15 லட்சத்து 50 ஆயிரத்தை கொடுக்க முயன்றபோது அவர் பணத்தை வாங்க மறுத்து விட்டார். அவர் எங்கள் சொத்தை அபகரிக்கும் நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறார். இதற்கிடையில் கடந்த 6-ந்தேதி அந்த நபர் எங்களிடம் வாங்கிய நிலத்தை வேறு ஒருவருக்கு கிரையம் செய்து கொடுத்துவிட்டார். நாங்கள் இதுகுறித்து கேட்டபோது அவர் எங்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து, எங்களது நிலத்தை மீட்டுத்தர வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறி இருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்