சேர்ந்தமரம் அருகே பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது ஜீப்பை ஏற்றி கொல்ல முயற்சி-2 பேர் கைது
சேர்ந்தமரம் அருகே, பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது ஜீப்பை ஏற்றி கொல்ல முயற்சி செய்ததாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்
சுரண்டை:
சேர்ந்தமரம் அருகே, பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது ஜீப்பை ஏற்றி கொல்ல முயற்சி செய்ததாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
பாதுகாப்பு பணி
தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் அருகே அரியநாயகிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் சீனு (வயது 12). பள்ளி மாணவனான சீனு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடலை வாங்க மாட்டோம் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று 4-வது நாளாக மாணவனின் உடலை வாங்க மறுத்து சாலைமறியல் போராட்டத்திற்கு சில அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தன. இதனால் அரியநாயகிபுரம் கிராமத்திற்குள் யாரும் நுழைந்து விடாதபடி நான்கு பகுதியிலும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். உள்ளூர் கிராமவாசிகளும் அடையாள அட்டையை காண்பித்த பின்னர் ஊருக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
கொல்ல முயற்சி
இந்த நிலையில் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த ஒரு அமைப்பைச் சேர்ந்தவர்களின் ஜீப்பை நிறுத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் மதனகலா விசாரித்தார். அப்போது ஊர் கிராமவாசிகள் தவிர வேறு யாரும் ஊருக்குள் செல்ல அனுமதி இல்லை என கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
போலீசார் ஊருக்குள் அனுமதிக்காததால் ஜீப்பை இன்ஸ்பெக்டர் மதனகலா மீது ஏற்ற முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதில் தடுமாறி விழுந்த மதனகலாவுக்கு காயம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
கைது
மதனகலா மீது வாகனத்தை ஏற்றி கொலை செய்ய முயற்சி செய்ததாக சந்திரசேகர் (வயது 36), குற்றாலம் குமார் (32) ஆகியோர் மீது சேர்ந்தமரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்கள் ஓட்டி வந்த ஜீப்பை பறிமுதல் செய்தனர்.