தி மு க முன்னாள் கவுன்சிலரை காரில் கடத்தி கொல்ல முயற்சி
விழுப்புரம் அருகே காரில் கடத்தி சென்று தி.மு.க. நகராட்சி முன்னாள் கவுன்சிலரை கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற அவரது மகன்கள் உள்பட 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்;
விழுப்புரம்
இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தி.மு.க. முன்னாள் நகரமன்ற கவுன்சிலர்
விழுப்புரம் மந்தக்கரை முகமதியார் தெருவில் வசித்து வருபவர் அப்துல்அமீது மகன் அகமது (வயது 57). தி.மு.க.வை சேர்ந்த இவர் நகராட்சி முன்னாள் கவுன்சிலராக இருந்தார். மேலும் நகராட்சி ஒப்பந்ததாரராகவும் இருந்து வருகிறார். இவருக்கும் அவரது மகன்களான உமர் என்கிற அசார்அலி(29), ஷாருக் (27) ஆகியோருக்கும் இடையே கடந்த சில மாதங்களாக சொத்து பிரச்சினை சம்பந்தமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில் சொத்து பிரச்சினை சம்பந்தமாக அகமதுவுக்கும், அவரது மகன்களுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் அகமதுவை அவரது மகன்கள் இருவரும் சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அகமது அவரது நண்பர்கள் உதவியுடன் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
காரை பின்தொடர்ந்தனர்
பின்னர் அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று நேற்று அதிகாலை 4 மணிக்கு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வந்த அகமது அங்கிருந்து வாடகை காரில் விழுப்புரம் மந்தக்கரையில் உள்ள வீட்டிற்கு சென்றார். வீட்டில் இருந்தால் மகன்கள் இருவரும் மீ்ண்டும் தன்னிடம் தகராறு செய்வார்கள் என்று எண்ணிய அகமது தனது உடைமைகளை எடுத்துக்கொண்டு சொந்த காரில் சென்னையில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்கு புறப்பட்டார்.
இதையறிந்த அகமதுவின் மகன்கள் உமர், ஷாருக் ஆகிய இருவரும் தங்கள் நண்பர்களான வினோத், நேதாஜி ஆகியோருடன் ஒரு காரில் அகமதுவின் காரை பின்தொடர்ந்து சென்றனர்.
கழுத்தை அறுத்து கொல்ல முயற்சி
விழுப்புரம்- சென்னை நெடுஞ்சாலையில் ரெயில்வே மேம்பாலம் அருகில் வந்தபோது அகமதுவின் காரை அவர்கள் 4 பேரும் திடீரென வழிமறித்தனர். பின்னர் அகமதுவை அவரது காரை விட்டு கீழே இறக்கி தாங்கள் வந்த காரில் கடத்திச்சென்றனர்.
அப்போது காரில் இருந்தபடியே அகமதுவை 4 பேரும் தாக்கியதோடு கத்தியால் அவரது கழுத்தை அறுத்தனர். இதில் ரத்தம் சொட்ட, சொட்ட அவர் மயங்கினார். உடனே விழுப்புரம் அருகே அய்யங்கோவில்பட்டு என்ற இடத்தில் சாலையோரமாக காரிலிருந்து அகமதுவை வெளியே தள்ளிவிட்டு 4 பேரும் காரில் தப்பிச்சென்றனர்.
விசாரணை
இதில் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அகமதுவை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவரை 108 ஆம்புலன்சு மூலம் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இச்சம்பவம் பற்றிய தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப்-இன்ஸ்பெக்டர் பரணிநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று அங்கு சிகிச்சையில் இருந்த அகமதுவிடமும் வாக்குமூலம் பெற்றனர். அதில், சொத்து பிரச்சினைக்காக தனது மகன்களே தன்னை கொலை செய்ய முயன்றதாக கூறியிருந்தார்.
4 பேருக்கு வலைவீச்சு
இதன் அடிப்படையில் உமர், ஷாருக், வினோத், நேதாஜி ஆகிய 4 பேர் மீதும் ஆள்கடத்தல், கொலை முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 4 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
தி.மு.க. நகராட்சி முன்னாள் கவுன்சிலரை காரில் கடத்திச்சென்று கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.