'இன்ஸ்டாகிராம்' மூலம் பழகி 2 சிறுமிகளை கடத்த முயற்சி - விமான நிலையத்தில் போலீசார் மீட்டனர்

Update: 2023-07-21 08:32 GMT

திரு.வி.க.நகர், 

சென்னை முகப்பேரை சேர்ந்த 10 மற்றும் 8-ம் வகுப்பு படிக்கும் அக்கா-தங்கைகளான 2 மாணவிகள் நேற்று காலை வீட்டில் இருந்து பள்ளிக்கு புறப்பட்டு சென்றனர். ஆனால் அவர்கள், பள்ளிக்கு செல்லாமல் மாயமானார்கள். இதுபற்றி சிறுமிகளின் தந்தை அளித்த புகாரின்பேரில் ஜெ.ஜெ.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான 2 சிறுமிகளை தேடி வந்தனர். அந்த சிறுமிகளுக்கு அவர்களது தந்தையின் செல்போனில் இருந்த 'இன்ஸ்டாகிராம்' மூலம் அடையாளம் தெரியாத நபருடன் பழக்கம் ஏற்பட்டது. இதற்காக சிறுமிகள் வீட்டில் இந்த ரூ.15 ஆயிரத்தை எடுத்து புதிய செல்போன் மற்றும் சிம்கார்டு வாங்கி, தந்தை செல்போனில் இருந்த 'இன்ஸ்டாகிராம்' முகவரியை பயன்படுத்தி அந்த நபரிடம் பழகி வந்தனர். அந்த நபர், 2 சிறுமிகளையும் கேரளா கடத்திச்செல்ல திட்டமிட்டார்.

இதற்காக சிறுமிகள் இருவரும் வீட்டில் இருந்து பள்ளிக்கு செல்லாமல் சென்னை விமான நிலையம் சென்றது போலீஸ் விசாரணையில் தெரிந்தது.

இன்ஸ்பெக்டர் சூர்யலிங்கம், சப்-இன்ஸ்பெக்டர் தேவசேனா மற்றும் தலைமை காவலர்கள் ராயப்பன், சங்கர் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் சென்று கேரளாவுக்கு கடத்த இருந்த 2 சிறுமிகளையும் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும் மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்