கோவிலுக்கு தானமாக வழங்கிய நிலத்தை அபகரிக்க முயற்சி
விழுப்புரம் அருகே கோவிலுக்கு தானமாக வழங்கிய நிலத்தை அபகரிக்க முயற்சி கலெக்டரிடம் பொதுமக்கள் புகார் மனு
விழுப்புரம்
விழுப்புரம் அருகே உள்ள தென்னமாதேவி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சார்பில் ராஜசேகர் என்பவர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எங்கள் கிராமத்தில் உள்ள ஹரிகரபுத்திர அய்யனார் கோவிலுக்கு சொந்தமாக 36 சென்ட் இடம் உள்ளது. இதனை கடந்த 2016-ம் ஆண்டு பட்டம்மாள் என்பவரிடமிருந்து கிரையம் பெற்றுள்ளதாக கூறி கனகராஜ் என்பவர் ரிட் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனுவின் அடிப்படையில் உயர்நீதிமன்றம், அந்த இடத்திற்குரிய ஆவணங்கள் அடிப்படையில் விசாரணை செய்து 12 வார காலத்திற்குள் உரிமையாளரிடம் ஒப்படைக்க வேண்டுமென மாவட்ட கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர், தாசில்தார் ஆகியோர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. விக்கிரவாண்டி தாசில்தார் இருதரப்பினரிடமும் அதற்குரிய ஆவணங்களை பெற்று அந்த கோப்புகள் மாவட்ட வருவாய் அலுவலர் விசாரணையில் உள்ளது. நீதிமன்ற கால அவகாசம் முடிந்துவிட்ட நிலையில் மாவட்ட நிர்வாகம் எந்த பதிலும் சொல்லவில்லை.
இந்த சூழலில் கனகராஜ் என்பவர் இந்த இடம் எனக்குத்தான்சொந்தம் என்று பொய்யான தகவலை சொல்லிக்கொண்டு வருகிறார். எனது பாட்டனார், எங்கள் ஊரில் உள்ள இந்த கோவிலுக்கு தானமாக கொடுத்த சொத்தாகும். அதை தவறுதலாக யுடிஆர் பட்டா திட்டத்தில், பட்டம்மாள் சுப்பிரமணியன் என்ற பெயரில் பட்டா மாற்றியதன் அடிப்படையில் கனகராஜ் என்பவர் அவரிடம் தவறான கிரையம் பெற்று சொத்து அவருக்கு உரிமை என்று உயர்நீதிமன்றத்திற்கு சென்றிருக்கிறார். ஆனால் 1917-ம் ஆண்டு முதல் இந்த சொத்து யாருக்கு சொந்தம் என்ற ஆவணங்களை ஒப்படைத்திருக்கிறேன். கோவில் பெயரில் பட்டா மாற்றம் செய்ய மனு கொடுக்கப்பட்டிருக்கிறது. 50 ஆண்டுகளாக இந்த இடம் கோவில் கட்டுப்பாட்டில் உள்ளது என்ற ஆவணங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் தீர்வு காணாதபட்சத்தில், பொய்யான தகவலை கூறிவரும் கனகராஜிக்கு சொத்து உரிமையாகி விடும் என்ற அச்சம், பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது. எனவே உரிய ஆவணங்களின் உண்மைத்தன்மை அடிப்படையில் கோவில் பெயரில் பட்டா மாற்றம் செய்திட வேண்டுமென அம்மனுவில் கூறியிருந்தனர். மனுவை பெற்ற மாவட்ட கலெக்டர் மோகன், இதுகுறித்து பரிசீலனை செய்வதாக கூறினார்.