அலுவலகம் முன்பு நிர்வாகி தீக்குளிக்க முயற்சி
காங்கிரஸ் கட்சி தேர்தல் நடந்த அலுவலகம் முன்பு நிர்வாகி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
விருதுநகர்,
நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி அமைப்பு தேர்தல் நடைபெறும் நிலையில் அடிப்படையிலான பூத் கமிட்டி தேர்தல் நேற்று நடைபெற்றது. விருதுநகர் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களுக்கான பூத் கமிட்டி தேர்தல் இந்நகர் லட்சுமி காலனியில் உள்ள எம்.பி. அலுவலகத்தில் நடைபெற்றது. கிழக்கு மாவட்டத்தில் 1,056 பூத் கமிட்டிகளும், மேற்கு மாவட்டத்தில் 824 பூத் கமிட்டிகள் உள்ள நிலையில் இதற்கான தலைவர் மற்றும் பிரதிநிதி தேர்தல் நடைபெற்றது.இந்த தேர்தலில் விதிமுறைப்படி டிஜிட்டல் முறையில் கட்சி உறுப்பினரானவர்கள் மட்டுமே தேர்வுக்கு தகுதி ஆனவர்கள். இத்தேர்தலுக்காக திருவனந்தபுரம் காங்கிரஸ் கமிட்டியை சேர்ந்த சிஜூ தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் 16 பார்வையாளர்கள் மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து வந்துள்ளனர். தேர்தல் நடைமுறை நாளை முடிவடையும் என்று தேர்தல் அதிகாரி சிஜூ தெரிவித்தார். இதற்கான கூட்டத்தில் சிவகாசியில் எம்.எல்.ஏ. அசோகன், கிழக்கு மாவட்ட தலைவர் ஸ்ரீ ராஜாசொக்கர், மேற்கு மாவட்ட தலைவர் ரங்கசாமி உள்ளிட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.இந்நிலையில் விருதுநகர் கிழக்கு வட்டார தலைவர் அரச குடும்பன்பட்டியை சேர்ந்த பிச்சைக்கனி என்பவர் தேர்தல் நடந்த அலுவலகத்திற்கு முன் தனக்கு முறையாக அழைப்பு அனுப்பவில்லை என கூறி கட்சி தலைமையை கண்டித்து உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு வெளியே நின்று கொண்டிருந்த கட்சி தொண்டர்களும், போலீசாரும் அவரை தடுத்து அழைத்து சென்றனர் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி கிழக்கு மாவட்ட தலைவர் ஸ்ரீ ராஜாசொக்கரிடம் கேட்ட போது கிழக்கு வட்டார தலைவர் பிச்சைக்கனிக்கு முறையாக அழைப்பு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.